பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி & அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே சந்திப்பு

Posted On: 24 SEP 2021 3:12AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது அமெரிக்க விஜயத்தின் போது 2021 செப்டம்பர் 23 அன்று வாஷிங்டன் டிசி யில் அமெரிக்காவின் துணைத் அதிபரான கமலா ஹாரிஸைச் சந்தித்தார்.

முதன் முறையான அவர்களது சந்திப்பு குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னதாக ஜூன் 2021 இல் தொலைபேசியில் உரையாடியதை அவர்கள் அப்போது அன்புடன் நினைவு கூர்ந்தனர். அவர்கள் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் மற்றும் இந்திய பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் சமீபத்திய உலகலாவிய முன்னேற்றங்கள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

இரு தலைவர்களும் தங்கள் நாடுகளில் உள்ள COVID-19 நிலைமை குறித்து விவாதித்ததுடன், துரிதமாக தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மற்றும் முக்கியமான மருந்துகள், சிகிச்சை சுகாதார உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்வது குறித்தும் கலந்துரையாடினர்.

காலநிலை மாற்றத்திற்காக கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிப்பதற்கான இந்தியாவின் முயற்சி மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் இயக்கம் பற்றி பிரதமர் பேசினார். மேலும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்க வாழ்க்கை முறை மாற்றங்களின் முக்கியத்துவத்தையும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் விண்வெளித் திட்டங்களில் கூட்டு முயற்சி, தகவல் தொழில்நுட்பம், குறிப்பாக வளர்ந்து வரும் முக்கியமான தொழில்நுட்பங்கள், அத்துடன் சுகாதாரத் துறை உள்ளிட்டவற்றில் இருதரப்பினரின் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இரு தலைவர்களும் ஊக்கம் நிறைந்த மக்களுக்கிடையான தொடர்புகள், பரஸ்பர நன்மை பயக்கும் கல்வி இணைப்புகள் ஆகியவை இரு நாடுகளுக்கிடையிலான அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் திறமையின் அடித்தளம் என்பதை ஒப்புக் கொண்டனர்.

பிரதமர் மோடி துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் திரு. டக்ளஸ் எம்ஹாஃப் இருவரையும் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

***********(Release ID: 1757622) Visitor Counter : 240