பிரதமர் அலுவலகம்
ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) உச்சிமாநாட்டில் பிரதமரின் உரை
Posted On:
17 SEP 2021 10:10PM by PIB Chennai
ஆப்கானிஸ்தான் குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) ஆகியவற்றுக்கிடையேயான உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததற்காக அதிபர் ரஹ்மோனுக்கு நன்றி தெரிவித்து எனது உரையை தொடங்குகிறேன்.
ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் நம்மைப் போன்ற அண்டை நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, இந்தப் பிரச்சினையில் பிராந்திய கவனம் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவது அவசியம்.
இந்த சூழலில், நாம் நான்கு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
முதலாவது என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் அதிகார மாற்றம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாக இல்லை, பேச்சுவார்த்தைகள் இன்றி அது நடந்தது.
புதிய அமைப்பை ஏற்பதில் பல கேள்விகளை இது எழுப்புகிறது.
பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட ஆப்கான் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பிரதிநிதித்துவமும் முக்கியமானது.
எனவே, அத்தகைய ஒரு புதிய அமைப்பை அங்கீகரிப்பது குறித்த முடிவு சர்வதேச சமூகத்தால் கூட்டாகவும் சரியான சிந்தனைக்குப் பிறகும் எடுக்கப்பட வேண்டும்.
இந்த பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பங்களிப்பை இந்தியா ஆதரிக்கிறது.
இரண்டாவது, ஆப்கானிஸ்தானில் உறுதியற்ற தன்மை மற்றும் அடிப்படைவாதம் தொடர்ந்தால், அது உலகம் முழுவதும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும்.
மற்ற தீவிரவாத குழுக்களும் வன்முறை மூலம் அதிகாரத்திற்கு வர ஊக்குவிக்கப்படலாம்.
கடந்த காலங்களில் நமது அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஆப்கானிஸ்தான் நிலம் வேறு எந்த நாட்டிலும் பயங்கரவாதத்தை பரப்ப பயன்படாது என்பதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில், உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புக்கான ஒரு உதாரணமாக இந்த விதிமுறைகள் மாறும்.
இந்த விதிமுறைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க இவை ஒரு நடத்தை நெறிமுறையாக இருக்க வேண்டும், மேலும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான அமைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.
மாண்புமிகு தலைவர்களே,
ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பான மூன்றாவது பிரச்சினை, கட்டுப்பாடற்ற போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் மனித கடத்தல் ஆகியவை.
ஆப்கானிஸ்தானில் ஏராளமான நவீன ஆயுதங்கள் உள்ளன. இவற்றின் காரணமாக முழு பிராந்தியத்திலும் நிலையின்மை ஏற்படும் அபாயம் ஏற்படும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராட்ஸ் (RATS) பொறிமுறையானது இவற்றை கண்காணிப்பதிலும் தகவல் பகிர்வை மேம்படுத்துவதிலும் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும்.
இந்த மாதம் முதல், எஸ்சிஓ-ராட்ஸ் கவுன்சிலின் தலைவராக இந்தியா உள்ளது. இந்த விஷயத்தில் நடைமுறை ஒத்துழைப்புக்கான திட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நான்காவது பிரச்சினை ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிர மனிதாபிமான நெருக்கடி.
நிதி மற்றும் வர்த்தக ஓட்டங்களில் குறுக்கீடு காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களின் பொருளாதார பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில், கொவிட் சவாலும் அவர்களது மன உளைச்சலுக்கு ஒரு காரணம்.
வளர்ச்சி மற்றும் மனிதாபிமான உதவிகளில் இந்தியா பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. உள்கட்டமைப்பு முதல் கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு வரை ஒவ்வொரு துறையிலும், ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் எங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளோம்.
இன்றும் கூட, ஆப்கானிஸ்தான் நண்பர்களுக்கு உணவு பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை வழங்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
மனிதாபிமான உதவிகள் ஆப்கானிஸ்தானுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.
மாண்புமிகு தலைவர்களே,
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய மக்கள் பல நூற்றாண்டுகளாக சிறப்பான நட்புறவைப் பகிர்ந்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் சமூகத்திற்கு உதவும் ஒவ்வொரு பிராந்திய அல்லது உலகளாவிய முயற்சிக்கும் இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்கும்.
நன்றி.
குறிப்பு: இது பிரதமரின் இந்தி உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு.
(Release ID: 1756117)
Visitor Counter : 239
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam