பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் பாதுகாப்பு அலுவலக வளாக திறப்பு விழாவில் பிரதமர் அற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 16 SEP 2021 4:06PM by PIB Chennai

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது மூத்த அமைச்சரவை தோழர்கள் திரு. ராஜ்நாத் சிங், திரு.ஹர்தீப் சிங் பூரி, அஜய் பட், கவுசல் கிஷோர், முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், முப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள், பெரியோர்களே, தாய்மார்களே, 75-வது சுதந்திர ஆண்டில், புதிய இந்தியாவின் விருப்பப்படி, நாட்டின் தலைநகரை மேம்படுத்தும் முக்கியமான நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். இந்த புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், நமது படைகள் மேலும் திறமையுடனும், வசதியாகவும் இயங்க உதவும். இந்த புதிய அலுவலக உருவாக்கத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இரண்டாம் உலகப் போரின்போது, கட்டப்பட்ட குடிசை போன்ற அமைப்புகளில் பாதுகாப்பு தொடர்பான பணிகள் இதுவரை நடைபெற்று வந்தன என்பதை அனைவரும் அறிவீர்கள். குதிரைகளைக் கட்டுவதற்கும், பாசறைகளுக்கு ஏற்ற வகையிலும் இவை கட்டப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சகம், முப்படைகளின் அலுவலகங்களாக இவை மாற்றப்பட்டு பல ஆண்டுகளாக இயங்கி வந்தன. அவ்வப்போது சிறிய பழுதுகள் பார்க்கப்பட்டு வந்தன. சில உயர் அதிகாரிகள் வரும் போது, புதிதாக பெயிண்ட் அடிப்பது வழக்கம். இவற்றை நான் பார்த்தபோது, நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படையான இடம் இப்படி மோசமாக இருப்பதா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால், ஊடகங்களோ, மற்றவர்களோ இதைக் கண்டு கொள்ளவில்லை.

இன்று 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில், ராணுவ வலிமையை நவீனப்படுத்தி வருகிறோம். ராணுவத்துக்கு நவீன ஆயுதங்கள் வழங்குதல், எல்லைப்புற கட்டமைப்பை நவீனப்படுத்துதல், முப்படையின் தலைமை தளபதி மூலம் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், ராணுவத்துக்கு தேவையான கொள்முதல்களை மேற்கொள்ளுதல் என ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை விமர்சிப்பவர்கள், இன்று 7,000-க்கும் அதிகமான ராணுவ அதிகாரிகள் இந்த வளாகத்தில் பணியாற்றுவது கண்டு மவுனமாவார்கள். ஏனெனில், இது சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த வளாகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால், அவர்களது தவறான தகவல்களும், பொய்களும் அம்பலமாகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், இத்திட்டத்தின் நோக்கம் மக்களுக்கு தெரியும். தலைநகரில் நவீன பாதுகாப்பு வளாகத்தை உருவாக்குவது மிகப்பெரிய முக்கியமான நடவடிக்கையாகும்.நமது வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான வசதிகள் இந்த வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.

நாட்டுக்காக தொண்டாற்ற நீங்கள் எனக்கு 2014-ல் வாய்ப்பு அளித்தபோது, அரசு அலுவலகங்களின் நிலை நன்றாக இல்லை என்பதை நான் உணர்ந்தேன். நாடாளுமன்ற கட்டிடமும் நல்ல நிலையில் இல்லை. 2014-ம் ஆண்டில் இந்தப் பணியை தொடங்கியிருக்க முடியும். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க நான் முதலில் முடிவு செய்தேன். அது நிறைவு பெற்ற பின்னர்தான் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை எடுத்தோம்.

நண்பர்களே, இந்தப் பணியுடன், அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கான  தங்குமிடம், சமையலறை, உணவு விடுதி போன்ற நவீன வசதிகள் இதில் அமையும். ஓய்வு பெற்ற வீரர்கள் வந்து செல்ல வசதியாக முறையான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளும் அமைந்துள்ளன. சுற்றுச் சூழலுக்கு உகந்த, அதே சமயம் பழமையான தோற்றத்துடன் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைநகரின் அடையாளமாக திகழும் வகையில், பழைய தோற்றம் பராமரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, 100 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லி இந்தியாவின் தலைநகராக இருந்து வருகிறது. இந்த 100 ஆண்டுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ற வசதிகள் செய்யப்படவில்லை. தலைநகர் என்பது வெறும் நகரமாக மட்டும் இருக்க முடியாது. தலைநகரம் என்பது சிந்தனை, தீர்மானம், நாட்டின் கலாச்சார வரிமையைப் பறைசாற்றுவதாக இருக்க வேண்டும். இந்தியா ஜனநாயகத்தின் அன்னை. ஆகையால், இந்தியாவின் தலைநகரம் இதற்கு ஏற்ப மக்கள் மையமாக இருக்க வேண்டும். இன்று, எளிதான வாழ்க்கை, எளிதாக தொழில் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்கு நவீன உள்கட்டமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. இதற்கு சென்ட்ரல் விஸ்டா பணிகள் வழிவகுக்கும்.

நணபர்களே, அம்பேத்கரின் கனவுகளை நனவாக்கும் வகையில், தலைநகரத்தில் பல புதிய கட்டுமானங்களை கட்டுவதில் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. இதில், நமது ராணுவ வீரர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னங்களும் அடங்கும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது, தேசிய நினைவுச் சின்னங்கள் தில்லியைப் பெருமிதம் கொள்ளச் செய்துள்ளன. இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எந்தத் திட்டத்திற்கும் 4-6 மாதங்கள் தாமதமாவது இயல்புதான். நாட்டின் நிதி வீணாகாமல் தடுக்கும் வகையில், புதிய பணி கலாச்சாரத்தை அறிமுகம் செய்ய முயற்சி மேற்கொண்டோம்.

பாதுகாப்பு அலுவலக வளாகம் 24 மாதங்களுக்குப் பதிலாக 12 மாதங்களிலேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாகும். அதாவது 50 சதவீத காலம் சேமிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால், தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களுக்கு இடையே, இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலான கொரோனாவுக்கு இடையே, இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் நாட்டின் போற்றுதலுக்குரியவர்கள் ஆவர். கொள்கையும், நோக்கமும் தெளிவாக இருந்தால், உறுதி வலுவாக இருந்தால், முயற்சிகள் உண்மையாக இருந்தால், எதுவும் சாத்தியம்தான். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திரு. ஹர்தீப் கூறுவது போல, உரிய காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.

நண்பர்களே, இந்த சுதந்திர சகாப்தத்தில், அதாவது அடுத்த 25 ஆண்டுகளில், புதிய தன்னிறைவான இந்தியாவை உருவாக்கும் இயக்கம், ஒவ்வொருவரது ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். புதிய கட்டிடங்கள் உற்பத்தி திறன், அரசின் செயல்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் நாட்டின் முன்முயற்சிக்கு ஆதரவாகவும், நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்திலும்  இருக்கும். மத்திய செயலகம், இணைப்புக்களுடன் கூடிய மாநாட்டு மண்டபங்கள், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வசதிகளுடன் மக்களுக்கு ஏற்ற நகரமாக தலைநகரம் உருவாகிறது. இந்த விருப்பத்துடன் நமது இலக்குகளை மிக விரைவாக அடைவோம் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

                                                                 *****



(Release ID: 1756090) Visitor Counter : 178