பிரதமர் அலுவலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21-வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 17 SEP 2021 2:22PM by PIB Chennai

மரியாதைக்குரியவர்களே,

வணக்கம்!

முதலில், எஸ்சிஓ அமைப்பின் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்காக அதிபர் ரஹ்மோனுக்கு எனது வாழ்த்துக்கள்.  மிகவும் சவாலான உலகளாவிய மற்றும் பிராந்திய சூழலில் கூட இந்த அமைப்பை அவர் திறம்பட நிர்வகித்து வருகிறார். நடப்பாண்டில், தஜிகிஸ்தான் 30 வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும்  இந்த தருணத்தில், இந்திய மக்கள் சார்பாக தஜிகிஸ்தான் சகோதர சகோதரிகளுக்கும், அதிபர் ரஹ்மோனுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மரியாதைக்குரியவர்களே,

இந்த ஆண்டு நாம் எஸ்சிஒ அமைப்பின் 20-வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். இந்த நல்ல தருணத்தில் புதிய நண்பர்கள் நம்முடன் இணைவது மகிழ்ச்சியான விஷயம். எஸ்சிஒ அமைப்பின் புதிய உறுப்பினராக ஈரானை நான் வரவேற்கிறேன். சவுதி அரேபியா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய மூன்று புதிய பங்குதார நாடுகளையும் நான் வரவேற்கிறேன். எஸ்சிஒ-ன் விரிவாக்கம் நமது அமைப்பின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டுகிறது. புதிய உறுப்பினர்கள் மற்றும் பங்குதார நாடுகள் மூலம் எஸ்சிஒ அமைப்பு மேலும் வலுவானதாகவும் மிகவும் நம்பகமானதாகவும் மாறும்.

மதிப்புக்குரியோரே

எஸ்சிஓ-வின் 20 வது ஆண்டு விழா இந்த அமைப்பின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க ஏற்ற சந்தர்ப்பமாகும். இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய சவால்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று நான் நம்புகிறேன் மேலும் இந்த பிரச்சனைகளின் அடிப்படை காரணமாக இப்பகுதிகளில் நிலவி வரும் புரட்சிக்கர நடவடிக்கைகள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துள்ள சமீபத்திய சம்பவங்கள் இந்த சவாலை இன்னும் வெளிப்படையாக நமக்கு உணர்த்தியுள்ளன. எஸ்சிஒ இந்த பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்வை காண முன் வர வேண்டும்.

நம் வரலாற்றைப் எடுத்துக் கொண்டால், மத்திய ஆசிய பகுதிகள் மிதவாத முற்போக்கான கலாச்சாரங்கள் மற்றும் விழுமியங்களின் கோட்டையாக இருந்ததைக் காணலாம். சூஃபியிசம் போன்ற மரபுகள் பல நூற்றாண்டுகளாக இங்கு செழித்து வளர்ந்ததுடன்,  இந்த பிராந்தியம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவியுள்ளன. இப்பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் அவர்களின் செல்வாக்கை நாம் இன்று கூட காணலாம். மத்திய ஆசியாவின் இந்த வரலாற்று பாரம்பரியத்தின் அடிப்படையில், எஸ்சிஓ புரட்சிப் போராட்டங்கள் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட ஒரு பொதுவான கருத்தியலை உருவாக்க வேண்டும்.

இந்தியாவிலும், கிட்டத்தட்ட அனைத்து எஸ்சிஓ நாடுகளிலும், மிதமான, சகிப்புத்தன்மையை உள்ளடக்கிய நிறுவனங்கள் மற்றும் இஸ்லாத்துடன் தொடர்புடைய மரபுகள் உள்ளன. எஸ்சிஓ அவர்களுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு வலைப்பின்னலை உருவாக்க பணிபுரிய வேண்டும். இந்த சூழலில், எஸ்சிஓ-ராட்ஸ் மூலம் செய்யப்படும் பயனுள்ள பணிகளை நான் பாராட்டுகிறேன். எஸ்சிஓ-ராட்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் வகையிலான நடவடிக்கைகளின் பட்டியல் நிகழ்வுகளில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பினர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மதிப்புரிக்குரியோரே

புரட்சிப் போராட்டங்களை எதிர்த்துப் போராடுவது பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கு மட்டுமல்ல, நமது இளைய தலைமுறையினரின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவசியமானது. வளர்ச்சியடைந்த உலகுடன் போட்டியிட, நமது பகுதி வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்குதாரராக மாற வேண்டும். இதற்காக நமது திறமையான இளைஞர்களை அறிவியல் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையை நோக்கி ஊக்குவிக்க வேண்டும்.

நமது இளம் தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் மூலம் இந்த வகையான சிந்தனையையும், புதுமையான உணர்வையும் நாம் ஊக்குவிக்க முடியும். இந்த அணுகுமுறையின் மூலம், இந்தியா கடந்த ஆண்டு முதல் எஸ்சிஓ ஆரம்ப நிலை தொழில்முனைவோர் கூட்டமைப்பு மற்றும் இளம் விஞ்ஞானிகள் மாநாட்டை ஏற்பாடு செய்தது. முந்தைய ஆண்டுகளில், இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தில் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியது.

யுபிஐ மற்றும் ரூபே கார்டு போன்ற நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களானாலும் சரி, கோவிட்-க்கு எதிரான போராட்டத்தில் நமது ஆரோக்ய-சேது மற்றும் கோவின் போன்ற டிஜிட்டல் தளங்களாக இருந்தாலும் சரி அவற்றை நாங்களாகவே முன்வந்து பிற நாடுகளுடன் பகிர்ந்துகொண்டோம். எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடனும், இந்த தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

மதிப்புக்குரியோரே

இந்த பிராந்தியத்தின் பரந்த பொருளாதார சாத்தியக்கூறுகள் தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது, அது கனிம வளம் அல்லது எஸ்சிஓ நாடுகளுக்கிடையேயான வர்த்தகமாக இருந்தாலும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, நாம் பரஸ்பர இணைப்பை வலியுறுத்த வேண்டும். வரலாற்றில் மத்திய ஆசியாவின் பங்கு முக்கிய பிராந்திய சந்தைகளுக்கு இடையே ஒரு இணைப்பு பாலமாகும். இந்த பிராந்தியத்தின் செழிப்புக்கான அடிப்படையும் இதுதான். மத்திய ஆசியாவுடனான தொடர்பை அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

நிலங்களால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவின் பரந்த சந்தையுடன் இணைப்பதன் மூலம் பெரும் நன்மை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, பரஸ்பர நம்பிக்கை இல்லாததால் பல இணைப்பு விருப்பங்கள் இன்று அவர்களுக்கு திறக்கப்படவில்லை. ஈரானின் சபஹார் துறைமுகத்தில் எங்களது முதலீடு மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு வழித்தடத்தை நோக்கிய எங்கள் முயற்சிகள் இந்த நம்பிக்கையால்தான் இயக்கப்படுகின்றன.

மதிப்புக்குரியோரே,

இணைப்புக்கான எந்தவொரு முயற்சியும் ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது. இணைப்புத் திட்டங்கள் பரஸ்பர நம்பிக்கையை உறுதிப்படுத்த ஆலோசனை, வெளிப்படைத்தன்மை மற்றும் பங்களிப்பும் இருக்க வேண்டும். இதில், அனைத்து நாடுகளின் எல்லைகள் தொடர்பான ஒருமைப்பாட்டின் கவுரவம் உள்ளடங்கி இருக்க வேண்டும். இந்த கொள்கைகளின் அடிப்படையில், எஸ்சிஓ பிராந்தியத்தில் இணைப்பு திட்டங்களுக்கு பொருத்தமான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இதன் மூலம் இந்த பிராந்தியத்தின் பாரம்பரிய இணைப்பை நாம் மீட்டெடுக்க முடியும், அப்போதுதான் இத்தகைய இணைப்புத் திட்டங்கள் நமக்கிடையேயான தொலைவை அதிகரிக்காமல் நம்மை இணைக்க பாடுபடும், இந்த முயற்சிக்கு, இந்தியா தனது தரப்பில் இருந்து எந்த பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது.

மதிப்புக்குரியோரே,

எஸ்சிஓ இன் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதன் முக்கிய கவனம் இப்பகுதியின் முன்னுரிமைகள் மீது இருந்தது. தீவிரவாதம், இணைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் பற்றிய எனது பரிந்துரைகள் எஸ்சிஓ இன்  இந்த பங்கை மேலும் வலுப்படுத்தும். நான் முடிப்பதற்கு முன்னதாக, இந்த அமைப்பின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ரஹ்மோனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 

இந்த திட்டங்கள் சவால்கள் நிறைந்ததாக இருந்தபோதிலும், அவர் இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியுள்ளார். எஸ்சிஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள, உஸ்பெகிஸ்தானுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, இந்தியாவின் முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்கிறேன்.

நன்றி!

***



(Release ID: 1755779) Visitor Counter : 175