பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் பாதுகாப்புக் கண்காட்சி- 2022-க்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 02 SEP 2021 4:11PM by PIB Chennai

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபாணி ஆகியோர் குஜராத் மாநிலம் கெவாடியாவில் பாதுகாப்புக் கண்காட்சி- 2022-க்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் பாதுகாப்பு கண்காட்சியின் 12-ஆவது பதிப்பு 2022 மார்ச் 10-13 ஆம் தேதிகளில் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெறும்.

2020-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சி மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியால் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை இன்றைய கூட்டத்தின் போது திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் குஜராத் அரசின் மூத்த அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டது.

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவமாகக் கொண்டாடப்படும் சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் இந்த வருட பாதுகாப்புக்கண்காட்சி நடைபெற இருப்பதால் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது பாதுகாப்பு கண்காட்சி- 2022-ஐ நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் குஜராத் அரசுக்கு இடையே திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.  ஹெலிபேட் கண்காட்சி மையத்தில் கண்காட்சியும், மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் கருத்தரங்கங்களும் நடைபெறும்.

அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றங்கரையில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளங்களின் நேரலை செயல்முறை விளக்கங்களுக்கு ஏற்பாடும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படவுள்ள இந்தக் கண்காட்சியில் அதிகபட்ச சர்வதேச மற்றும் உள்நாட்டு பங்களிப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751405

*****************


(Release ID: 1751483) Visitor Counter : 313