பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலா பாக் நினைவிட வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்



நினைவிடத்தில் அருங்காட்சியக அரங்குகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்

ஜாலியன் வாலா பாக் சுவர்களின், குண்டு துளைத்த இடங்களில் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் கனவுகள் இன்னும் தெரிகின்றன: பிரதமர்

1919, ஏப்ரல் 13ம் தேதியின் அந்த 10 நிமிடங்கள், நமது சுதந்திர போராட்டத்தின் அழியாத கதையாக மாறிவிட்டதால், இன்று சுதந்திர இந்தியாவின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாடுகிறோம்: பிரதமர்

கடந்தகால கொடூரங்களை புறக்கணிப்பது எந்த நாட்டுக்கும் சரியானதல்ல. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14ம் தேதியை ‘பிரிவினை கொடூரங்களின் நினைவு தினமாக கடைப்பிடிக்க இந்தியா முடிவு செய்தது: பிரதமர்

சுதந்திரத்துக்காக, நமது பழங்குடியின சமுதாயம் அதிகளவில் பங்களித்துள்ளது மற்றும் மிகச்சிறந்த தியாகங்களை செய்துள்ளது. அவர்களின் பங்களிப்பு வரலாற்று புத்தகத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் இடம்பெறவில்லை: பிரதமர்

கொரோனாவாக இருக்கட்டும் அல்லது ஆப்கானிஸ்தானாக இருக்கட்டும், இந்தியர்களுக்காக இந்தியா துணை நிற்கும்: பிரதமர்

அம்ரித் மகோத்ஸவத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும்,

Posted On: 28 AUG 2021 8:21PM by PIB Chennai

ஜாலியன் வாலா பாக் நினைவிடத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியின்போது, நினைவிடத்தில் அருங்காட்சியக கூடங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த வளாகத்தை மேம்படுத்த மத்திய அரசு எடுத்த பல வளர்ச்சி நடவடிக்கைகளை  இந்த நிகழ்வு, காட்டுகிறது.  

பஞ்சாப்பின் வீரமான நிலத்துக்கும், ஜாலியன் வாலா பாக் புனித மண்ணுக்கும் பிரதமர் தலை வணங்கினார். சுதந்திரச் சுடரை அணைப்பதற்கு, இதற்கு முன் இது போன்று நடக்காத மனிதநேயமற்ற செயலுக்கு ஆளாகிய பாரத தாயின் குழந்தைகளை அவர் வணங்கினார். 

கூட்டத்தில் பேசிய பிரதமர், ஜாலியன் வாலா பாக் சுவற்றின் குண்டுகள் துளைத்த அடையாளங்களில் அப்பாவி சகோதர, சகோதரிகளின் கனவுகள் இன்னும் தெரிகின்றன. தியாகக் கிணற்றில் பறிக்கப்பட்ட எண்ணிலடங்கா தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் அன்பு மற்றும் உயிர்களை நாம் இன்று  நினைவு கூர்கிறோம் என அவர் கூறினார்.  

நாட்டுக்காக உயிர்நீத்த சர்தார் உதம் சிங், சர்தார் பகத் சிங் போன்ற எண்ணிலடங்கா புரட்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் ஊக்கமளித்த இடம் ஜாலியன் வாலா பாக் என பிரதமர் குறிப்பிட்டார்.  1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதியின் அந்த 10 நிமிடங்கள், நமது சுதந்திரப் போராட்டத்தின் அழியாத கதையாக மாறிவிட்டது. அதன் காரணமாக, நாம் இன்று விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாடுகிறோம்.  இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், நவீன ஜாலியன் வாலா பாக் நினைவிடத்தை, சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் அர்ப்பணிப்பது, நமது அனைவருக்கும் உற்சாகமளிக்கும் ஒரு வாய்ப்பு என அவர் கூறினார். 

ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு முன்பாக, புனித பைசாகியின் சந்தைகள் இந்த இடத்தில் நடைப்பெற்று வந்தன. சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், இந்த புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலா பாக், புதிய தலைமுறையினருக்கு, இந்த புனித இடத்தின் வரலாற்றை நினைவு கூரும் மற்றும் இதன் கடந்த கால சம்பவங்களை அறிய ஊக்குவிக்கும்.  

வரலாற்றை பாதுகாப்பது, ஒவ்வொரு நாட்டின் கடமை. இதுதான் நாம் முன்னேறி செல்லும் வழியை காட்டுகிறது.  கடந்தகால கால கொடூரங்களை மறப்பது எந்த நாட்டுக்கும் சரியானதல்ல. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14ம் தேதியை பிரிவினை கொடூரங்களின் நினைவு தினமாக அனுசரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய பிரிவினையின் போது, ஜாலியன் வாலா பாக் கொடூரங்களை இந்தியா கண்டது.  பிரிவினையின் மிகப்பெரிய பாதிப்பாளர்கள் பஞ்சாப் மக்கள். பிரிவினையின் போது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், குறிப்பாக பஞ்சாப் குடும்பங்களில் ஏற்பட்ட வலியை நாம் இன்னும் உணர்கிறோம். 

உலகில் எந்த பகுதியிலும், இந்தியர்கள் சிக்கலில் இருந்தாலும், இந்தியா தனது முழு பலத்தோடு, அவர்களுக்கு உதவ துணை நிற்கும் என பிரதமர் கூறினார். கொரோனா காலமாக இருக்கட்டும், ஆப்கானிஸ்தான் பிரச்சினையாக  இருக்கட்டும், இது போன்ற நெருக்கடிகளை உலகம் தொடர்ச்சியாக சந்திக்கிறது. ஆபரேஷன் தேவி சக்தி மூலம், ஆப்கானிஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்தியா அழைத்துவரப்பட்டனர். 

தற்போதைய உலகளாவிய நிலவரங்கள், ஒரே பாரதம், உன்னத பாரதத்தின் முக்கியத்துவத்தையும், தற்சார்பு இந்தியா, தன்னம்பிக்கை ஆகியவற்றின் தேவையை சுட்டிக் காட்டுகின்றன.  இச்சம்பவங்கள், நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்த வழிகாட்டுகின்றன. 

அம்ரித் மகோத்ஸவத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாடி கவுரவிக்கப்படுகின்றனர். சுதந்திர போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் தொடர்புடைய இடங்களை பாதுகாக்கவும்,  தேசிய நாயகர்களை முன்னுக்கு கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் கூறினார். ஜாலியன் வாலா பாக் போல் நாடு முழுவதும் உள்ள தேசிய நினைவிடங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. 

சுதந்திரத்துக்காக, நமது பழங்குடியின சமுதாயம் அதிகளவில் பங்களித்துள்ளது மற்றும் மிகச் சிறந்த தியாகங்களை செய்துள்ளது. அவர்களின் பங்களிப்பு வரலாற்று புத்தகத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் இடம்பெறவில்லை என பிரதமர் வேதனையுடன் கூறினார். நாட்டின் 9 மாநிலங்களில் சுதந்திரத்துக்காக பழங்குடியினர் போராடியதை அருங்காட்சியகங்களில் காட்டும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார். 

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த நமது வீரர்களுக்கு தேசிய நினைவிடம் அமைக்க வேண்டும் என நாடு விரும்பியது என பிரதமர் குறிப்பிட்டார். இன்றைய இளைஞர்களின் மனிதில் நாட்டை பாதுகாக்கும் மற்றும் நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யும் உணர்வை தேசிய போர் நினைவிடம், தூண்டுகிறது என அவர் திருப்தி தெரிவித்தார். 

சுதந்திரத்தின் வைரவிழா காலம், நாட்டுக்கு மிக முக்கியமானது. வைரவிழா காலத்தில், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியை ஒவ்வொருவரும் முன்கொண்டு செல்ல வேண்டும். பஞ்சாப் நமக்கு எப்போதும் எழுச்சி ஊட்டுகிறது, இன்று அனைத்து மட்டத்திலும், திசைகளிலும் பஞ்சாப் முன்னேறுவது அவசியம்.  இதற்காக நாம் அனைவரும், அனைவருக்காகவும், அனைவரின் முன்னேற்றத்துக்காகவும் ஒவ்வொருவரும்  இணைந்து பணியாற்ற வேண்டும்.  நாடு தனது இலக்குகளை விரைவில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு, ஜாலியன் வாலா பாக் பூமி தொடர்ந்து சக்தியை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  விவகாரத்துறை அமைச்சர், கலாச்சாரத்துறை இணையமைச்சர்கள், பஞ்சாப் ஆளுநர் மற்றும் முதல்வர் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749998


(Release ID: 1750233) Visitor Counter : 232