பிரதமர் அலுவலகம்

37-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

Posted On: 25 AUG 2021 7:48PM by PIB Chennai

மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்து ஏழாவது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.

எட்டு திட்டங்கள் மற்றும் மேலும் ஒரு திட்டம் என ஒன்பது திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. மேற்கண்ட எட்டில் தலா மூன்று திட்டங்கள் ரயில்வே அமைச்சகம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தொடர்பானதும், இரண்டு திட்டங்கள் மின்சார அமைச்சகம் தொடர்பானதும் ஆகும்.

சுமார் ரூ 1,26,000 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, சத்திஸ்கர், அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் தில்லி ஆகிய 14 மாநிலங்கள் தொடர்பானவை ஆகும்.

திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் அறிவுறுத்தினார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப தளத்தின் பல்வேறு பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆக்சிஜன் ஆலைகளின் கட்டமைப்பு மற்றும் மருத்துவமனை படுக்கைகள் கிடைத்தல் குறித்து தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாநில அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

முந்தைய 36 பிரகதி உரையாடல்களில், ரூ 13.78 லட்சம் கோடி மதிப்பிலான 292 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

 

-----



(Release ID: 1749061) Visitor Counter : 278