குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கொவிட் தடுப்பூசித் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக அதன் பாதுகாப்பு தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மருத்துவத் துறையினரை குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 24 AUG 2021 1:39PM by PIB Chennai

கொவிட்-19-க்கு எதிரான தடுப்பூசியை போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்காக சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு மருத்துவ துறையையும், குறிப்பாக, இந்திய மருத்துவ சங்கத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

கிவ் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் கர்நாடக அரசின் நிலையான இலக்குகள் ஒருங்கிணைப்பு மையத்தின் முன்முயற்சியான 'இந்திய தடுப்பூசித் திட்டத்தை' இன்று தொடங்கிவைத்துப் பேசிய அவர், ஒரு சில மக்கள், தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார். தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் இன்னும் நிலவும் மக்கள் மத்தியில், அது பற்றிய போதிய புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

கொவிட் தடுப்பூசித் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு, தங்கள் தொகுதிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருப்பதை மக்கள் பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தடுப்பூசி பற்றிய தயக்கத்தை கைவிடுமாறு ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “துல்லியமான தகவல்களை அளிப்பதன் வாயிலாக, தவறான நம்பிக்கைகள் அகற்றப்பட வேண்டும்”, என்றார் அவர்.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான மிகவும் பயனளிக்கும் கேடயமாக தடுப்பூசி செயல்படுவதாகக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தொற்றின் தீவிரத்தையும், குறைக்க, தடுப்பூசி உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். “அதாவது தொற்று ஏற்பட்டால் கூட, நோயின் பாதிப்பு லேசானதாகவே இருக்கும்”, என்று அவர் கூறினார்.

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் வீதம் 97.6% ஆக இருந்தபோதும், “தொற்று நம்மை விட்டு முழுவதும் நீங்கவில்லை என்பதால், கொவிட் சம்பந்தமான அனைத்து நெறிமுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்”, என்று எச்சரித்தார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெறாது என்பதை வலியுறுத்திய திரு நாயுடு, முகக் கவசம் அணிந்து, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஒவ்வொருவரும் பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்தார். துரித உணவு வகைகளைத் தவிர்த்துதட்பவெப்ப நிலைகள் மற்றும் நமது உடலுக்கு மிக பொருத்தமான, இந்திய பாரம்பரிய முறைப்படி நன்கு சமைத்த உணவு வகைகளை உட்கொள்ளுமாறு இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நகர்புற மையங்கள் முதல் ஊரகப் பகுதிகள் வரையிலான நமது மருத்துவ உள்கட்டமைப்புகளில் நிலவும் இடைவெளியை நீக்க முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்த பெருந்தொற்று வாய்ப்பளித்துள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். இதுதொடர்பாக, பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தனியார்துறை, அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

நவீன மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட முன்னேறிய நாடுகளாலும் கூட கொவிட்-19 தொற்றினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய தாக்கத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டிய திரு வெங்கையா நாயுடு, மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் நம்நாட்டில் தொற்றின் தாக்கம் திருப்திகரமான வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதிகளவிலான மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதில் இணைந்து பணியாற்றி வரும் மத்திய மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுகளைப் பாராட்டிய அவர், நாட்டில் இதுவரை 58 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வரும் கிவ் இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பையும் அவர் பாராட்டினார்.

கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மாநில அமைச்சர்கள் டாக்டர் கே சுதாகர் மற்றும் திரு முனிரத்னா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி. சி. மோகன், கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஷாலினி ரஜ்னீஷ், கிவ் இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனர் திரு அதுல் சதீஜா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748500

*****

 

 


(Release ID: 1748535) Visitor Counter : 248