பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமெரிக்காவின் குவாம் சென்றடைந்தன இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக், காட்மாட்

Posted On: 22 AUG 2021 12:20PM by PIB Chennai

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக், காட்மாட் ஆகியவை ஆகஸ்ட் 21-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள குவாம் என்ற தீவை அடைந்தன. இந்த இரு கப்பல்களும் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் கடற்படை களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் மலபார்-21 என்ற பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றன. இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மலபார் கடல்சார் பயிற்சியில், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள 4 முக்கிய கடற்படைகள் தற்போது பங்கேற்கின்றன. கடற்படை கிழக்கு மண்டல தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.பி. சிங், கடல்சார் துறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசிப்பார்.

மலபார்-21 பயிற்சி, ஆகஸ்ட் 26-29 வரை நடைபெறும். நாடுகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்தவும், சிறந்த செயல் முறைகளைக் கற்றுக் கொள்ளவும், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளில் பரஸ்பர புரிதலை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் பயிற்சி, ஓர் சிறந்த தளமாக விளங்கும். இந்தியா, ஆஸ்திரேலியா ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், தொலைதூர கடல்சார் கண்காணிப்பு விமானம் ஆகியவை பயிற்சியில் பங்கேற்கும். கொவிட் கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் இந்தப் பயிற்சிகள் நடைபெறுவதன் மூலம், கடல்சார் பாதுகாப்பின்மீது  நாடுகள் கொண்டுள்ள உறுதித்தன்மை எடுத்துரைக்கப்படுகிறது.

ஐஎன்எஸ் ஷிவாலிக், காட்மாட், ஆகியவை கிழக்கு கடற்படை தலைமையின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நவீனரக கப்பல்கள் ஆகும். ஐஎன்எஸ் ஷிவாலிக் கப்பலுக்கு கேப்டன் கபில் மேத்தா தலைமை தாங்குவார்‌. ஐஎன்எஸ் காட்மாட் கப்பலுக்கு கமாண்டர் ஆர் கே மஹாரானா தலைமை வகிப்பார். பல்வேறு ஆயுதங்கள் மற்றும் உணரிகள் பொருத்தப்பட்டு ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்த இரண்டு கப்பல்கள், இந்தியாவின் போர் கட்டமைப்பு திறன்களை எடுத்துரைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747992

*****************

 


(Release ID: 1748013) Visitor Counter : 387