எரிசக்தி அமைச்சகம்

மத்திய அமைச்சர் ஆர் கே சிங், காப் 26 (COP 26) மாநாட்டின் தலைவர் மாண்புமிகு திரு அலோக் சர்மா சந்திப்பு

Posted On: 17 AUG 2021 4:04PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் சபையின் 26-வது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாட்டின் (காப்26) தலைவர் மாண்புமிகு திரு அலோக் சர்மா, மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங்கை இன்று சந்தித்துப் பேசினார்.

பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட இங்கிலாந்து ஆர்வமுடன் இருப்பதாக மேதகு திரு. அலோக் சர்மா தெரிவித்தார். பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் வளர்ந்த நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட உறுதிபாட்டிற்கு இணங்க, பசுமை எரிசக்திக்கான உலக வங்கியை உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்தன. காப் 26 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஆதரவளிக்குமாறு இந்தியாவை இங்கிலாந்து கேட்டுக் கொண்டது.

கடந்த மார்ச் மாதம் வரை 16369 மெகாவாட் திறன் கொண்ட, பயனற்று இருந்த அனல் மின் நிலையங்களுக்கு இந்தியா ஓய்வளித்திருப்பதாக அமைச்சர் திரு ஆர். கே. சிங் தெரிவித்தார். காற்றாலை மின்சாரத் துறையில் இங்கிலாந்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். எரிசக்தியின் சேமிப்புச் செலவைக் குறைப்பதற்காக வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நடைபெறவுள்ள பசுமை ஹைட்ரஜன் மற்றும் லித்தியம் அயானுக்கான ஏல நடைமுறைகளில் கலந்து கொள்ளுமாறு இங்கிலாந்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் இந்தியாவிலுள்ள இங்கிலாந்தின் உயர் ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746683

 

-----(Release ID: 1746750) Visitor Counter : 76