தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அறிவிப்பு

Posted On: 14 AUG 2021 3:06PM by PIB Chennai

நாட்டின் பிரிவினையின் போது தங்களது இன்னுயிர்களை நீத்தவர்களுக்கும், வேர்களில் இருந்து அப்புறப்படுத்தப் பட்டவர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிவினை கொடுமைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த பிரகடனத்தின் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளை சேர்ந்த இந்தியர்களுக்கு பிரிவினையின் போது மக்கள் அனுபவித்த கொடுமைகள் நினைவுக்கு வரும்.

இது குறித்த அறிவிப்பை தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, “பிரிவினை வலிகளை என்றைக்குமே மறக்க முடியாது. லட்சக்கணக்கான நமது சகோதர சகோதரிகள் வெறுப்பு மற்றும் வன்முறையின் காரணமாக உயிரிழந்தனர். நமது மக்களின் போராட்டம் மற்றும் தியாகத்தின் நினைவாக, ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகள் தினமாக அனுசரிக்கப்படும்.

சமூக பாகுபாடுகள், ஒற்றுமையின்மை ஆகியவற்றை களைய வேண்டிய தேவையை பிரிவினை கொடுமைகள் தினம் நமக்கு நினைவூட்டி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்களுக்கு அதிகாரமளித்தலுக்கான உணர்வை வலுவாக்கட்டும்,” என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த தினம் ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. ஆனால், விடுதலையின் மகிழ்ச்சியுடன் இணைந்து பிரிவினை கொடுமையும் வந்தது. புதிதாக பிறந்த சுதந்திர இந்தியாவுடன், பிரிவினையின் வன்முறை அத்தியாயங்களும் இணைந்து, ஆறா வடுவை லட்சக்கணக்கான இந்தியர்களிடையே ஏற்படுத்தியது.

மனித குலத்தின் மிகப்பெரிய புலம்பெயர்தல்களில் ஒன்றாக அமைந்த பிரிவினை, சுமார் 20 மில்லியன் மக்களை பாதித்தது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

ஆகஸ்ட் 14-15 2021 நள்ளிரவில் தனது 75-வது சுதந்திர தினத்தை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடவுள்ளது. ஆனால், நாட்டின் நினைவில் பிரிவினையின் வலியும், வன்முறையும் ஆழமாக பதிந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும், மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் நாடு முன்னேறி விட்டாலும், பிரிவினையின் வலியை மறக்க முடியாது.

நமது சுதந்திரத்தை கொண்டாடும் அதே வேளையில், வன்முறை வெறிக்கு தங்களது உயிர்களை தியாகம் செய்த நமது நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களை நாடு நன்றியுடன் வணங்குகிறது.

*****************



(Release ID: 1745829) Visitor Counter : 307