நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சிகளின் ஜனநாயக விரோத மற்றும் வன்முறை செயல்கள் இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் இருண்ட அத்தியாயத்தை எழுதியுள்ளன

Posted On: 12 AUG 2021 3:46PM by PIB Chennai

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விரும்பத்தகாத செயல்கள் வழக்கமாகி விட்டன. இந்த கூட்டத்தொடரின் போது அவர்களின் செயல்கள் விதிவிலக்காக இல்லாமல் தொடர்ச்சியாகவே இருந்தன. விதிமுறைகள் புத்தகத்தை கடந்த வருடம் கிழித்ததில் இருந்து, அவை இதுவரை கண்டிராத நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுவது வரை, எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வெட்கத்துக்குரியதாக மாறி வருகின்றன.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவை கூறப்பட்டன. மத்திய அமைச்சர்கள் திரு பியுஷ் கோயல்திரு தர்மேந்திர பிரதான், திரு முக்தார் அப்பாஸ் நக்வி, திரு பிரகலாத் ஜோஷி, திரு பூபேந்திர யாதவ், திரு அனுராக் சிங் தாகூர், திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் திரு வி முரளிதரன் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தொடரை நடத்தவிடக் கூடாது என்று எதிர்கட்சிகள் வெளிப்படையாக சொன்னதாக அமைச்சர்கள் குறிப்பிட்டனர். அவையின் செயல்பாடுகளை நடத்தவிடக் கூடாது என்பதே உள்நோக்கமாக இருந்தது. விவாதங்களுக்கான வாய்ப்பை பலமுறை அரசு வழங்கியது. ஆனால், அவை காதில் விழவில்லை. மாண்புமிகு அமைச்சரிடம் இருந்த காகிதங்களை பிடுங்கிய எதிர்கட்சியினர், அவற்றை கிழித்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களை மாண்புமிகு பிரதமர் அறிமுகப்படுத்தக்கூட விடவில்லை.

அவையின் மையத்திற்கு வந்த சில எதிர்கட்சி உறுப்பினர்கள், மேசை மீது ஏறியதோடு விதிமுறைகள் புத்தகத்தை அவைத்தலைவர் மீது வீசி எறிந்து நாடாளுமன்றத்தின் புனிதத்தை கெடுத்தனர். மேசை மீது ஏறி நின்ற உறுப்பினர், வெறும் மேசை மீது மட்டும் ஏறி நிற்கவில்லை, நாடளுமன்ற நன்னடத்தையை தனது காலில் போட்டு மிதித்தார். அவைத்தலைவர் மீது புத்தகத்தை வீசியதன் மூலம், நாடளுமன்ற நன்னடத்தையை அவைக்கு வெளியே அவர் வீசி எறிந்தார்.

இத்தகைய நடத்தை அவை இதுவரை கண்டிராதது, அவையின் நற்பெயருக்கு பெரும் அவப்பெயரை உருவாக்கியுள்ளது. அமைப்பின் நன்மதிப்புக்கு பெரும் தீங்கு விளைவித்ததோடு, தலைமை செயலாளருக்கு படுகாயம் ஏற்படுத்தும் வகையிலும் எதிர்கட்சிகளின் நடத்தை அமைந்தது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் எதிர்கட்சிகள் செயல்பட்டன. தங்களது செயல்பாடுகளுக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. மாறாக, வெட்கத்திற்குரிய இந்த செயல்களை வீரத்தின் அடையாளமாக அவர்கள் கருதுகின்றனர்.

பொது நலம் சார்ந்த விஷயங்களை விவாதிக்கக் கூடாது என்பதற்காகவே இத்தகைய செயல்களில் எதிர்கட்சியினர் ஈடுபட்டதாக திரு பியுஷ் கோயல் கூறினார். எதிர்கட்சிகளின் அவமானகரமான செயல்பாட்டுக்காக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டது. தேசிய ஒற்றுமையின்மையை உருவாக்குவதற்காக எதிர்கட்சிகளின் ஒற்றுமையை அவர்கள் உருவாக்கினர். நாட்டுக்கு பதில் சொல்ல அவர்கள் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745147

----(Release ID: 1745245) Visitor Counter : 193