இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0-ஐ ஆகஸ்ட் 13 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 10 AUG 2021 5:04PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவ்-இந்தியா@75 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் நடத்தவுள்ளது. 2021 மார்ச் 12 அன்று விடுதலையின் அம்ரித் மகோத்சவ்-இன் அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையினால் உந்தப்பட்டு, செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்கள்@75 எனும் தலைப்பின் கீழ் விடுதலையின் அம்ரித் மகோத்சவ்-இன் கொண்டாட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வகுத்துள்ளது.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகச் செயலாளர் திருமதி உஷா சர்மா, ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0- ஆகஸ்ட் 13 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் தொடங்கி வைக்கவுள்ளார் என்று தெரிவித்தார். எல்லையோர பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ரயில்வே, நேரு யுவ கேந்திர சங்கம், இந்திய திபெத் எல்லையோரக் காவல் படை, எஸ்எஸ்பி உள்ளிட்டவை நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களில் இருந்து காணொலி மூலம் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக்கும் கலந்து கொள்கிறார். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு இடங்களில் இருந்து 75 நிகழ்ச்சிகள் அன்று நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, அக்டோபர் 2 வரை ஒவ்வொரு வாரமும் 75 மாவட்டங்களில் உள்ள தலா 75 கிராமங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு, 744 மாவட்டங்களில் உள்ள தலா 75 கிராமங்களிலும், நாடு முழுவதும் உள்ள 30,000 கல்வி நிறுவனங்களிலும் ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் நடைபெறும். 7.50 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் மக்கள் இதில் பங்கேற்பார்கள்.

இது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், “75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், உடல் உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான இந்தியாவே வலிமையான இந்தியாவாக இருக்க முடியும். எனவே, ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0-ல் அனைவரும் கலந்து கொண்டு, மக்கள் இயக்கமாக அதை மாற்ற நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

உறுதிமொழி, தேசிய கீதம், சுதந்திர ஓட்டம், கலாச்சார நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு ஆகியவை ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0-ன் முக்கிய அங்கங்களாக இருக்கும். முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், ஊடக பிரபலங்கள், மருத்துவர்கள், விவசாயிகள் மற்றூம் ராணுவத்தினர் இதில் கல்ந்து கொண்டு மக்களுக்கு ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் இதர அமைப்புகளும் சுதந்திர ஓட்ட நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தாங்கள் ஏற்பாடு செய்யும் ஓட்டங்கள் குறித்த தகவல்களை https://fitindia.gov.in எனும் இணையதளத்தில் மக்கள் பதிவேற்றுவதோடு, #Run4India மற்றும் #AzadikaAmritMahotsav ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் பதிவேற்றலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744453

------



(Release ID: 1744587) Visitor Counter : 285