பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

சமையல் எரிவாயு மானியங்களின் விலையை நுகர்வோர் பயனடையும் வகையில் அரசு தொடர்ந்து மாற்றிமைத்து வருகிறது: மக்களவையில் மத்திய அமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி தகவல்

Posted On: 09 AUG 2021 2:38PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:

2011-12 நிதியாண்டு முதல் எரிவாயு மானியங்களுக்காக, அரசு ரூ. 7,03,525 கோடியை அளித்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு மானியத்திற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் 2021-22 நிதி ஆண்டில் ரூ. 12,995 கோடியாக உள்ளது. நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் விலை, சர்வதேச சந்தையின் பொருட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியங்களின் விலையை நுகர்வோர் பயனடையும் வகையில் அரசு தொடர்ந்து மாற்றிமைத்து வருகிறது. மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் விலையை சர்வதேச சந்தை‌ விலையின் மாறுபாடுகளுக்கு இணங்க எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை மற்றும் அரசு முடிவின் அடிப்படையில் மானியங்கள் அதிகரிக்க/ குறைக்கப்படும்.

வாகன எரிவாயுவை சந்தைப்படுத்த அங்கீகரிக்கப்படும் வழிமுறைகள் மாற்றியமைப்பு:

வாகன எரிவாயுவை சந்தைப்படுத்த அங்கீகரிக்கப்படும் வழிகாட்டுதல்களை அரசு மாற்றியமைத்துள்ளது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதோடு தனியார் துறையினரின் பங்களிப்பிற்கும் உத்வேகம் அளிக்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஐஎம்சி லிமிடெட், ஆன்சைட் எனர்ஜி தனியார் நிறுவனம், அசாம் கேஸ் நிறுவனம், எம் கே ஆக்ரோடாக் தனியார் நிறுவனம், ஆர்பிஎம்எல் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனம், மனாஸ் ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் அண்ட் இஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அமைச்சகம் வழங்கியுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல்:

மத்திய பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தற்போது 90% பெட்ரோல் மற்றும் 10% எத்தனால் அடங்கிய 10% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்து வருகின்றன. எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் எத்தனால் விநியோகம் ஆண்டு 2020-21-க்காக 343.16 கோடி லிட்டர் எத்தனாலை பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு விநியோகிக்க எத்தனால் வழங்குநர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 02.08.2021 வரை 209.67 கோடி லிட்டர் எத்தனால் பெறப்பட்டுள்ளது.

திரவ இயற்கை எரிவாயுவின் பயன்பாடு ஊக்குவிப்பு:

திரவ இயற்கை எரிவாயு பயன்பாடு மற்றும் விநியோகத்தை ஊக்குவிப்பதற்காக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

•        திரவ இயற்கை எரிவாயு உள்ளிட்ட இயற்கை எரிவாயுவை தொழில்துறை மற்றும் வர்த்தக நுகர்வோருக்கு விநியோகிப்பதை மேம்படுத்துவதற்காக  நகர எரிவாயு விநியோக இணைப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

•        திரவ இயற்கை எரிவாயு முனையங்களை அமைத்தல்/ திறனை மேம்படுத்துதல்.

•        தேசிய நெடுஞ்சாலைகள், தங்க நாற்கர சாலைகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைப்பதை ஊக்குவித்தல்.

உயிரி எரிபொருள் தேசிய கொள்கை:

நாடு முழுவதும் உயிரி எரிபொருள் மீது மதிப்பீடு செய்து தேசிய உயிரி எரிபொருள் சேமிப்பு கிடங்கை உருவாக்குவதை உயிரி எரிபொருள் தேசிய கொள்கை, 2018 நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில், இந்தியாவில் உயிரி எரிவாயு உற்பத்திக்கான உபரி பயிர் மதிப்பீடுகள் என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.   பிரதமரின் ஜீ-வன் யோஜனா திட்டத்தின் கீழ் பஞ்சாப், ஹரியானா, ஒடிசா, அசாம் ஆகிய இடங்களில் 4 வர்த்தக திட்டங்களுக்காக தலா ரூ. 150 கோடி நிதி உதவியையும், ஹரியானாவில் ஓர் சோதனை ஆலையை ரூ. 15 கோடியில் நிறுவவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744023

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744022

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744020

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744021

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744018

*****************



(Release ID: 1744120) Visitor Counter : 235