பிரதமர் அலுவலகம்

இ-ருப்பி மின்னணு கட்டண தீர்வின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 02 AUG 2021 6:52PM by PIB Chennai

வணக்கம்,

 

இந்த முக்கிய நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்டிருக்கும்  ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது சக நண்பர்கள், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், வெவ்வேறு தொழில் சங்கங்களுடன் தொடர்புடைய நண்பர்கள், புதிய நிறுவனங்கள் மற்றும் நிதி தொழில்நுட்பத்தைச் சேர்ந்த எனது இளம் நண்பர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள், எனதருமை சகோதர, சகோதரிகளே,

 

மின் ஆளுகைக்கு ஒரு புதிய பரிணாமத்தை இன்று நாடு அளிக்கிறது. மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி பலன் பரிவர்த்தனையை மேலும் தரமிக்கதாக மாற்றுவதில் இ-ருப்பி ரசீது முக்கிய பங்கு வகிக்கிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் கசிவுகளற்ற விநியோகம்  அனைவருக்கும் வழங்கப்படுவதை இது உறுதி செய்யும். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், மக்களின் வாழ்க்கையுடன் தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு முன்னேறுகிறது என்பதை இ-ருப்பி எடுத்துரைக்கிறது. 75-ஆவது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு அம்ருத் மஹோத்சவத்தை நாடு கொண்டாடும் வேளையில் இந்த நிகழ்வு நடைபெறுவதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற தருணத்தில் எதிர்கால சீர்திருத்தத்தை நோக்கிய மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையை நாடு மேற்கொண்டுள்ளது.

 

நண்பர்களே,

 

அரசு மட்டுமல்லாமல், ஒருவரது சிகிச்சை, கல்வி அல்லது எந்தவித பணிக்காக உதவ நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் விரும்பினால், ரொக்க பணத்திற்கு பதிலாக, இ-ருப்பி வாயிலாக அந்த நிறுவனம் பணத்தை செலுத்தலாம். இதன்மூலம் அந்தத் தொகை வழங்கப்பட்ட காரணத்திற்காக, அப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும். முதல் கட்டமாக இந்தத் திட்டம் சுகாதாரத்துறையில் அமல்படுத்தப்படுகிறது.

உதாரணத்திற்கு, 100 ஏழை மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒரு அமைப்பு முன்வரும்போது, இந்திய அரசின் இலவச தடுப்பூசித் திட்டத்திற்கு பதிலாக தடுப்பூசிகளை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கும் தனியார் மருத்துவமனைகளை அந்த அமைப்பு தேர்வு செய்தால், குறிப்பிட்ட 100 ஏழை மக்களுக்கு இ-ருப்பி ரசீதுகள் வழங்கப்படலாம். இதன் மூலம் தடுப்பூசிக்கு மட்டுமே அந்தத் தொகை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்.

 

ஒரு மூத்த குடிமக்கள் இல்லத்தில், கூடுதலாக 20 புதிய படுக்கைகளை ஒருவர் ஏற்படுத்த விரும்பினால், அப்போது இ-ருப்பி ரசீது மிகவும் உதவிகரமாக இருக்கும். அதேபோல, 50 ஏழை மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதற்கும், கோ-சாலையில் தீவனங்களை அளிப்பதற்கும் இந்த ரசீது பயனுள்ளதாக இருக்கும்.

 

தேசிய கண்ணோட்டத்தில் இதனை பார்த்தோமேயானால், புத்தகங்களுக்காக அரசு தொகையை அனுப்பினால், அந்தத் தொகைக்கு புத்தகங்கள் மட்டுமே வாங்கப்படுவதை இ-ருப்பி உறுதிசெய்யும்.

 

மானிய உரங்களுக்கு உதவி அளிக்கப்பட்டால், உரங்களை வாங்குவதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும். அளிக்கப்பட்ட தொகையிலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை மட்டுமே வாங்க முடியும்.

 

நண்பர்களே,

 

தொழில்நுட்பம், வசதியானவர்களுக்கு மட்டுமே என்றும், இந்தியா போன்ற ஏழை நாடுகளில் தொழில்நுட்பத்தால் என்ன பயன் என்றும் முன்னர் சில பேர் கருத்து தெரிவித்தனர். தொழில்நுட்பத்தை ஓர் இயக்கமாக மாற்றுவது தொடர்பாக நமது அரசு பேசியபோது, அதுபற்றி ஏராளமான அரசியல்வாதிகளும், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வல்லுநர்களும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இன்று இதுபோன்ற மக்களின் எண்ணங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர்களது எண்ணங்கள் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நாட்டின் அணுகுமுறை வேறு விதமாக, புதியதாக உள்ளது. ஏழைகளுக்கும், அவர்களது வளர்ச்சிக்கும் பயன்படுத்தும் சாதனமாக தொழில்நுட்பத்தை இன்று நாம் பார்க்கிறோம். இந்தியாவில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை தொழில்நுட்பம் எவ்வாறு புகுத்துகிறது என்பதை தற்போது உலகம் காண்கிறது.

 

இன்றைய தனித்துவம் வாய்ந்த சேவையைக் காணுங்கள். ஜன்-தன் கணக்குகளைத் துவக்குவதற்கும், ஆதார் மற்றும் செல்பேசியுடன் அவற்றை இணைப்பதற்கும் (ஜாம்) பல ஆண்டுகள் நாடு கடுமையாக உழைத்ததால் இன்று நாம் இந்த இடத்தில் இருக்கிறோம். ஜாம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் முக்கியத்துவத்தை ஏராளமான மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அதன் முக்கியத்துவத்தை பொதுமுடக்கக் காலங்களில் நாம் உணர்ந்தோம். வளர்ந்த நாடுகளில் உள்ள ஏழை மக்களுக்கு முழு ஊரடங்கின்போது எவ்வாறு உதவி அளிப்பது என அந்நாடுகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இந்தியாவில் ஓர் விரிவான அமைப்புமுறை தயாராக இருந்தது. இதர நாடுகள், அஞ்சல் அலுவலகங்களையும், வங்கிகளையும் திறந்து கொண்டிருந்த சமயத்தில், பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதி உதவிகளை இந்தியா அனுப்பி வந்தது.

 

இந்தியாவில் இதுவரை ரூ. 17.5 லட்சம் கோடி, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நேரடி பலன் பரிவர்த்தனையின் மூலம் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களின் பயன்களை மத்திய அரசு அளித்து வருகிறது. இதன் மூலம் சுமார் 90 கோடி மக்கள் நேரடியாகவோ, இதர வழிகளிலோ பயனடைந்து வருகிறார்கள். நேரடி பலன் பரிவர்த்தனையின் வாயிலாக ரேஷன், சமையல் எரிவாயு, சிகிச்சை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சம்பளம், வீடு கட்டுவதற்கான உதவி உள்ளிட்ட ஏராளமான பயன்கள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1.35 லட்சம் கோடி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த முறை, விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்ததற்காக சுமார் ரூ. 85,000 கோடி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட, ரூ. 1.75 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை தவறான நபர்களிடம் செல்வதை இந்தத் திட்டம் தடுத்துள்ளது.

 

நண்பர்களே,

 

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சேவை விநியோகத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைப் பொறுத்தவரையில், சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் முறையான பயன்பாடு மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

 

தொழில்நுட்பத்தின் ஆற்றலை பெருந்தொற்றின் காலகட்டத்திலும் நாடு உணர்ந்துள்ளது. ஆரோக்கிய சேது செயலி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இன்று, அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் செயலிகளுள் அதுவும் ஒன்று. அதேபோல, பொதுமக்கள் தடுப்பூசி மையங்களைத் தேர்வு செய்வது, முன்பதிவு செய்வது மற்றும் சான்றிதழைப் பெறுவதில் கோவின் தளம்  உதவிகரமாக உள்ளது. எனவே, இந்தியாவின் கோவின் அமைப்புமுறை நாடு முழுவதும் ஏராளமான நாடுகளை ஈர்த்து வருகிறது. இந்தியாவும் உலக நாடுகளுடன் அதனை பகிர்கிறது.

 

நண்பர்களே,

 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பீம் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட போது, இந்தியாவின் மின்னணு பரிவர்த்தனைகளின் வளர்ச்சி, ஏழைகள், நலிவடைந்தவர்கள், சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு  அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்திருந்தேன். இன்று நாம் அதை அனுபவிக்கிறோம். ஜூலை மாதத்தில் 300 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் யுபிஐ வாயிலாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் ஏற்பட்டுள்ளன. தேநீர், பழரசம், பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பவர்கள் கூட இன்று இதனைப் பயன்படுத்துகின்றனர்.

 

அதேவேளையில், இந்தியாவின் ரூபே அட்டையும், நாட்டின் பெருமைக்கு வலு சேர்க்கிறது. சிங்கப்பூர் மற்றும் பூட்டானிலும் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நாட்டில் 66 கோடி ரூபே அட்டைகள் பயன்படுத்தப்படுவதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் இந்த அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அட்டைகளும் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்துள்ளன.

 

நண்பர்களே,

 

ஏழைகளுக்கு, தொழில்நுட்பம் எவ்வாறு அதிகாரம்  அளிக்கிறது என்பதற்கு பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் மற்றொரு சிறந்த உதாரணம். இன்று நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். கொரோனா காலகட்டத்திலும் சுமார் ரூ. 2300 கோடி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழை மக்கள், தங்களது கடன்களை மின்னணு பரிவர்த்தனைகள் வாயிலாக தற்போது செலுத்துகிறார்கள்.

 

நண்பர்களே,

 

கடந்த 6-7 ஆண்டுகளில் மின்னணு உள்கட்டமைப்பு மற்றும் மின்னணு பரிவர்த்தனைகளில் மேற்கொள்ளப்பட்ட பணியின் தாக்கத்தை தற்போது உலகம் அங்கீகரித்து வருகிறது. குறிப்பாக, வளர்ந்த நாடுகளில் கூட இல்லாத வகையில் நிதி தொழில்நுட்பத்திற்கு பிரம்மாண்ட அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இளைஞர்களுக்கும், புதுமை நிறுவனங்களின் சூழலியலுக்கும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.

 

நண்பர்களே,

 

இ-ருப்பி ரசீதும் வெற்றியின் புதிய அத்தியாயங்களை உருவாக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நமது வங்கிகளுக்கும், இதர பணம் செலுத்தும் தளங்களுக்கும் இதில் மிகப்பெரும் பங்குண்டு. நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகள், பெரு நிறுவனங்கள், தொழில்துறைகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. மாநில அரசின் திட்டங்களின் பயன்கள் துல்லியமாகவும், முறையாகவும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இ-ருப்பியின் அதிகபட்ச பயன்பாட்டை உபயோகிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரம்மாண்ட சீர்திருத்தத்திற்காக மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நன்றி!

 

குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****

 



(Release ID: 1741857) Visitor Counter : 224