பிரதமர் அலுவலகம்

இ-ருபி டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்


இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் கசிவுகளற்ற விநியோகத்தில் அனைவருக்கும் இ-ருபி சீட்டு உதவும்: பிரதமர்

நேரடி பலன் பரிவர்த்தனையை இன்னும் அதிக செயல்திறன் மிக்கதாக ஆக்குவதில் முக்கிய பங்காற்றவுள்ள இ-ருபி, டிஜிட்டல் ஆளுகை முறைக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும்: பிரதமர்

ஏழைகளுக்கு உதவும், அவர்களது வளர்ச்சிக்கான கருவியாக தொழில்நுட்பத்தை நாங்கள் பார்க்கிறோம்: பிரதமர்

புதுமைகள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சேவை வழங்கலில் உலகின் முன்னணி நாடுகளுக்கு தலைமையேற்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது: பிரதமர்

டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக கடந்த 6-7 வருடங்களில் நாட்டில் செய்யப்பட்ட பணிகளை உலகம் அங்கீகரித்து வருகிறது: பிரதமர்

Posted On: 02 AUG 2021 5:59PM by PIB Chennai

இ-ருபி எனும் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது டிஜிட்டல் கட்டணத்திற்கான பணமில்லா மற்றும் தொடர்பில்லா கருவியாகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நேரடி பலன் பரிவர்த்தனையை இன்னும் அதிக செயல்திறன் மிக்கதாக ஆக்குவதில் முக்கிய பங்காற்றவுள்ள இ-ருபி, டிஜிட்டல் ஆளுகை முறைக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று கூறினார். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் கசிவுகளற்ற விநியோகத்தில் அனைவருக்கும் இ-ருபி உதவும் என்றுஅவர் கூறினார். மக்களின் வாழ்வை தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் இந்தியா எவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாக இ-ருபி விளங்குவதாக அவர் கூறினார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டை குறிக்கும் அம்ருத் மகோத்சவத்தை நாடு கொண்டாடும் சமயத்தில் இந்த எதிர்காலத்தை மனதில் கொண்ட சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அரசு மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பும் ஒருவருக்கு சிகிச்சை, கல்வி அல்லது வேறு எந்தப் பணிக்கும் உதவ விரும்பினால்பணத்திற்குப் பதிலாக இ-ருபி சீட்டை கொடுக்க முடியும்.

அவரால் கொடுக்கப்பட்ட பணம் கொடுக்கப்பட்ட அதே வேலைக்கு பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

இ-ருபி என்பது ஒரு வகையில், நபர் மற்றும் நோக்கம் சம்பந்தப் பட்டது.

எந்த உதவி அல்லது பலனுக்காக பணம் அளிக்கப்படுகிறதோ, அந்த நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படுவதை இந்த இ-ருபி உறுதி செய்யப் போகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

முன்பெல்லாம் நம் நாட்டில் தொழில்நுட்பம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே, இந்தியா போன்ற ஏழை நாட்டில் தொழில்நுட்பத்திற்கு வேலை இல்லை என்று சொன்னார்கள் என்று பிரதமர் நினைவுக் கூர்ந்தார், இந்த அரசு தொழில்நுட்பத்தை ஒரு இயக்கமாக ஏற்றபோதுஅரசியல்வாதிகள், சில வகையான நிபுணர்கள் அதை கேள்விக்குட்படுத்தினார்கள் என்று அவர் கூறினார். அவர்களின் கூற்றை நாடு இன்றைக்குக் பொய்யாக்கியுள்ளது. நாட்டின் இன்றைய சிந்தனை வித்தியாசமாகவும், புதிதாகவும் உள்ளது. ஏழைகளுக்கு உதவும், அவர்களது வளர்ச்சிக்கான கருவியாக தொழில்நுட்பத்தை இன்று நாம் பார்க்கிறோம்.

பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தை தொழில்நுட்பம் எவ்வாறு கொண்டு வருகிறது என்பதைப் பற்றியும், புதிய வாய்ப்புகளை எவ்வாறு ஏழைகளுக்காக ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். இன்றைய பிரத்தியேக பொருளை அடைவதற்கான அடித்தளம் கைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்கும் ஜாம் அமைப்பை உருவாக்கியதன் மூலம் மூன்று வருடங்களுக்கு முன்பே இடப்பட்டதென்று அவர் கூறினார்.

ஜாமின் பலன்கள் மக்களுக்கு தெரிவதற்கு சில காலம் பிடித்தது என்றும் பொதுமுடக்கத்தின் போது மற்ற நாடுகள் தங்களது மக்களுக்கு உதவ சிரமப்பட்ட போது, உதவித் தேவைப்படுவோருக்கு நாம் எவ்வாறு உதவினோம் என்றும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் மக்களின் வங்கி கணக்குகளில் ரூ 17.5 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் நேரடி பலன் பரிவர்த்தனை முறையை பயன்படுத்துகின்றன. சமையல் எரிவாயு, ரேஷன், மருத்துவ சிகிச்சை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், கூலி வழங்கல் என்று 90 கோடி இந்தியர்கள் ஏதாவது ஒரு வகையில் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதியின் கீழ் ரூ 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. கோதுமைக்கான அரசு கொள்முதலுக்கும் இதே முறையில் ரூ 85,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ரூ 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி தவறான கைகளுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது இதன் மிகப்பெரிய பலனாகும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏழைகள், நலிவடைந்தோர், சிறு தொழில்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினரை இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி அதிகாரமளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். ஜூலை மாதம் நடைபெற்ற ரூ 6 லட்சம் கோடி மதிப்பிலான 300 கோடி யூபிஐ பரிவர்த்தனைகள் மூலம் இதை உணரலாம்.

தொழில்நுட்பத்தை உள்வாங்கி, பயன்படுத்துவதில் எந்த நாட்டுக்கும் இந்தியா சளைத்ததல்ல என்று பிரதமர் கூறினார். புதுமைகள், தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சேவை வழங்கலில் உலகின் முன்னணி நாடுகளுக்கு தலைமையேற்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் நாட்டின் சிறிய மற்றும் பெரிய நகரங்களில், 23 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர விற்பனையாளர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த கொரோனா காலத்தில் சுமார் 2300 கோடி ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

நாட்டில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக கடந்த 6-7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை உலகம் அங்கீகரிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

குறிப்பாக இந்தியாவில், ஃபின்டெக்-கின் மிகப்பெரிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

 பெரிய நாடுகளில் கூட அத்தகைய தளம் இல்லை என்று அவர் கூறினார்.

*****************


(Release ID: 1741654) Visitor Counter : 320