பிரதமர் அலுவலகம்

கோவின் உலகளாவிய உச்சிமாநாடு 2021-இல் பிரதமரின் உரை

Posted On: 05 JUL 2021 3:27PM by PIB Chennai

மேன்மைமிகு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், சுகாதார தொழில் வல்லுநர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள நண்பர்கள் அனைவருக்கும்

வணக்கம்!

கோவின் உலகளாவிய உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிபுணர்கள் எங்களுடன் கலந்து கொண்டிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், அனைத்து நாடுகளிலும் பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் இதற்கு  ஈடான நிகழ்வு எதுவுமில்லை. எத்துணை ஆற்றல் மிக்க நாடாக இருப்பினும், அதனால் தனியே இதுபோன்ற சவாலை எதிர்கொள்ள முடியாது என்பதை அனுபவம் எடுத்துக் காட்டியுள்ளது. மனிதநேயம் மற்றும் மனித காரணங்களுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றி, ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதே கொவிட்-19 பெருந்தொற்று நமக்குக் கற்றுக் கொடுத்துள்ள மிகப்பெரிய பாடமாகும். நமது சிறந்த நடைமுறைகள் பற்றி ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். பெருந்தொற்றின் துவக்கம் முதலே இந்தப் போராட்டத்தில் எங்களது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்களை சர்வதேச சமூகத்துடன் பகிர்வதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. பல்வேறு தடைகளையும் கடந்து எங்களால் இயன்ற அளவு உலக நாடுகளுடன் பகிர நாங்கள் முயல்கிறோம். சர்வதேச நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

நண்பர்களே,

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மென்பொருள் என்பது வள கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு துறை. அதனால் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதால் எங்கள் கோவிட் தடமறிதல் மற்றும் கண்காணிப்பு செயலியை திறந்த ஆதாரமாக மாற்றினோம். சுமார் 200 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன், இந்த ஆரோக்கிய சேது' செயலி, மேம்பாட்டாளர்களுக்கான தயார்நிலையிலான தொகுப்பாக விளங்குகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படுவதால், வேகம் மற்றும் அளவிற்கு நிஜ உலகில் இது சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

நண்பர்களே,

பெருந்தொற்றிலிருந்து மனித சமூகம் வெற்றிகரமாக மீள்வதற்கு தடுப்பூசியே சிறந்த நம்பிக்கை. தடுப்பூசி உத்தி குறித்து திட்டமிடத் தொடங்கியது முதலே, இந்தியாவில் நாங்கள்  மின்னணு வாயிலான அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்தோம். இன்றைய உலகமயமாகிய உலகில்பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டுமேயானால், இது போன்ற மின்னணு அணுகுமுறை அவசியமானது ஆகும். அனைத்திற்கும் மேலாக, பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டதை அவர்களால் நிரூபிக்கப்பட வேண்டும். அதுபோன்ற ஆதாரங்கள் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும்.  எப்போது, எங்கே, யாரால் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டோம் என்ற ஆவணத்தையும் பொதுமக்கள் பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசியின் ஒவ்வொரு டோசின் விலைமதிப்பற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு டோசையும் தடம் அறிந்து, அவை வீணாவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மின்னணு அணுகுமுறை இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமல்ல.

நண்பர்களே,

இந்திய நாகரிகம், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படை உண்மையை ஏராளமான மக்களுக்கு பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. அதனால் தான் கோவின் என்று நாங்கள் அழைக்கும்  தடுப்பூசிக்கான எங்களது தொழில்நுட்பத் தளம், திறந்த ஆதாரமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பல்வேறு நாடுகளிலும் அது பயன்பாட்டிற்கு வரும். உங்கள் அனைவருக்கும் இந்தத் தளத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதல் படியாக இந்த உச்சிமாநாடு அமைந்துள்ளது. இந்தத் தளத்தின் வாயிலாக தான் 350 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 9 மில்லியன் மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தினோம். லேசான காகிதங்களை ஆதாரமாக அவர்கள் எடுத்துச் செல்லத் தேவையில்லை. அனைத்து தகவல்களும் மின்னணு வடிவத்தில் உள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக, தங்களது உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த மென்பொருளை எந்த நாட்டிற்கு தகுந்தவாறும் வடிவமைத்துக் கொள்ளலாம். இதன் தொழில்நுட்ப தகவல்கள் குறித்து இன்றைய உச்சிமாநாட்டில் விரிவாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனை தொடங்குவதற்கு நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனவே உங்களை காத்திருக்கவைக்க நான் விரும்பவில்லை. ஆதலால், மிகவும் ஆக்கபூர்வமான விவாதங்கள் இன்று நடைபெறுவதற்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற அணுகுமுறையின் வழிகாட்டுதலின்படி இந்த பெருந்தொற்றை மனித சமூகம் நிச்சயம் வெற்றிகொள்ளும்

நன்றி.

மிக்க நன்றி.

*****************


(Release ID: 1732869) Visitor Counter : 291