சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நீதித்துறையின் மின்னணு உள்கட்டமைப்பு மாற்றியமைப்பு

Posted On: 27 JUN 2021 10:09AM by PIB Chennai

இந்திய நீதித் துறையின் மின்னணு உள்கட்டமைப்பை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து உயர்நீதிமன்றங்களின் இணையதளங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான கேப்ட்சா என்ற குறுகிய இணையதள தட்டச்சு சோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள், வழக்குகளின் தற்போதைய நிலை போன்ற அத்தியாவசிய தகவல்களைப் பெறுவதற்கு இந்த கேப்ட்சா, நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. பல்வேறு உயர்நீதிமன்றங்களின் இணையதளங்களில், இதுவரை இருந்து வந்த பிரத்தியேக காணொளி கேப்ட்சா வசதியினால் பார்வையற்றோர் தாங்களாகவே இதனை அணுக இயலாத நிலை இருந்தது. அனைத்து உயர் நீதிமன்றங்களுடன் இணைந்து, காணொளியுடன், ஒலி வடிவிலான கேப்ட்சா வசதியையும் மின்னணு குழு உருவாக்கி உள்ளது. இதன் மூலம் பார்வையற்றவர்களும் இணையதள தகவல்களைத் தாங்களாகவே எளிதில் அணுக முடியும்.

நீதிமன்ற ஆவணங்களை அணுகுவதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்கும் முயற்சியிலும் இந்த மின்னணுக் குழு ஈடுபட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவர் டாக்டர் நீதிபதி டி ஒய் சந்திரசூட், ஜூன் 25 தேதியிட்டு அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது சம்பந்தமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சி, தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து, மாற்று திறனாளிகளுக்கு உகந்த வகையில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கான தேடுதல் தளத்தின் (https://judgments.ecourts.gov.in/)  உருவாக்கமாகும். அனைத்து உயர்நீதிமன்றங்களின் இறுதித் தீர்ப்புகளும், ஆணைகளும் இந்தத் தளத்தில் இடம் பெற்றுள்ளன.

மின்னணு குழுவின் இணையதளமும் (https://ecommitteesci.gov.in/)  மின்னணு நீதிமன்றங்களின் இணையதளமும் (https://ecourts.gov.in/ecourts_home/) மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730627

 

-----



(Release ID: 1730691) Visitor Counter : 271