பாதுகாப்பு அமைச்சகம்

கடல்சார் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்களை உருவாக்கும் ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், ஜிஎஸ்எல் நிறுவனம் கையெழுத்து

Posted On: 22 JUN 2021 2:23PM by PIB Chennai

இந்திய கடலோர காவல்படையின் பயன்பாட்டிற்காக ரூ. 583 கோடி மதிப்பில் கடல்சார் மாசுவைக் கட்டுப்படுத்தும் இரண்டு கப்பல்களை உருவாக்குவதற்காக கோவா ஷிப்யார்டு நிறுவனத்துடன் (ஜிஎஸ்எல்) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (ஜூன் 22, 2021) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, ஜிஎஸ்எல் நிறுவனத்தால் இந்த சிறப்பு கப்பல்கள் உருவாக்கப்படும். இந்திய பொருட்களை வாங்குதல்- உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரித்து மற்றும் உருவாக்கப்படும்என்ற பாதுகாப்பு மூலதன கொள்முதலுக்கான உயரிய முன்னுரிமை பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கடலில் எண்ணெய் கசிவால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் மாசு ஏற்படுவதைத் திறம்பட கையாளும் வகையில் இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். இந்த இரண்டு கப்பல்களை நவம்பர் 2024 மற்றும் மே 2025-இல் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் மாசு பற்றிய ஆய்வு நடவடிக்கைகள், எண்ணெய் கசிவு கண்காணிப்பு/ உதவி நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காக தற்போது இந்திய கடலோரக் காவல்படையிடம் மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் போர்பந்தரில் மூன்று கடல் சார் மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்கள் இயங்கி வருகின்றன. புதிய கப்பல்களின் மூலம் கிழக்கு மற்றும் அந்தமான் நிக்கோபார் மண்டலங்களில் மாசுவைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் இயங்குவதற்கான வசதியுடன் கூடிய இந்தக் கப்பல்கள் , கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்துவது, மீட்பது போன்ற நடவடிக்கைகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மாசு கட்டுப்பாடு உபகரணங்களுடன் அமைக்கப்படவுள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் செயல்திறனை ஊக்குவித்து, சுமார் 200 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந்த விற்பனையாளர்கள் இயங்கும் கப்பல் கட்டுமான துறையில் வேலைவாய்ப்புகளையும் இந்த முயற்சி அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729353

*****************



(Release ID: 1729421) Visitor Counter : 167