பிரதமர் அலுவலகம்

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான குறுகியகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

Posted On: 18 JUN 2021 1:39PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகாக்களான திரு.மகேந்திர நாத் பாண்டே அவர்களே, ஆர்.கே.சிங் அவர்களே, மற்ற மூத்த அமைச்சர்களே, இளம் அமைச்சர்களே, தொழில்நிபுணத்துவம் பெற்றவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளே வணக்கம்…

இன்று, கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரும் போரில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்கத்தின் அடுத்தகட்டம் தொடங்கியுள்ளது. கொரோனா முதல் அலை காலத்தின்போது, நாட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் சேர்ந்தனர். இது கொரோனாவை எதிர்கொள்ள நாட்டின் முயற்சிகளை ஊக்குவித்தது. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு கிடைத்த அனுபவங்களே, இன்றைய பயிற்சித் திட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளன. கொரோனா இரண்டாவது அலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெறுவது மற்றும் அடிக்கடி தனது தன்மையை மாற்றிக் கொள்வதால், சவால்களை உணர்ந்துள்ளோம். இந்த வைரஸ் இன்னும் நம்மிடையே உள்ளது. இது உருமாற்றம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, சிகிச்சை முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், நம் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள நாட்டை மேலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இலக்குடன், ஒரு லட்சம் கொரோனா முன்களப் பணியாளர்களை உருவாக்குவதற்காக மிகப்பெரும் பயிற்சித் திட்டம், இன்று தொடங்குகிறது.

நண்பர்களே,

இந்த பெருந்தொற்று, ஒவ்வொரு நாடு, நிறுவனங்கள், சமூகங்கள், குடும்பம் மற்றும் ஒவ்வொரு மனிதரின் திறமை மற்றும் குறைபாடுகளை அடிக்கடி பரிசோதித்துள்ளது. அதேநேரத்தில், அறிவியல், அரசு, சமூகம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என்ற அடிப்படையில், நமது திறனை வலுப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா சிகிச்சை தொடர்பான தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் பரிசோதனை கட்டமைப்புகள் முதல் மருத்துவக் கட்டமைப்புகள் வரை மிகப்பெரும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை விநியோகிக்கும் பணி, தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது. போர்க்கால அடிப்படையில், 1,500-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த உற்பத்தி மையங்கள் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முயற்சிகளுக்கு உதவும் வகையில், மிகப்பெரும் அளவில் திறன்பெற்ற மனிதவளத்தை உருவாக்குவதும், புதிய நபர்களை சேர்ப்பதும் மிகவும் அவசியமானது. இதன் அடிப்படையில், கொரோனாவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்துக்கு உதவும் வகையில், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இரண்டு-மூன்று மாதங்களில் நிறைவடையும். இந்தப் பயிற்சிகளை பெறுவோர், உடனடியாக பணிக்கு வருவார்கள். பயிற்சிபெற்ற உதவியாளர் என்ற முறையில், அவர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்து, சுமையைக் குறைப்பார்கள். நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தேவையின் அடிப்படையில், இந்த குறுகியகால வகுப்புகளை நாட்டின் மூத்த வல்லுநர்கள் வடிவமைத்துள்ளனர். இன்று ஆறு வகையான புதிய சிறப்பு வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செவிலியர் பணி, வீட்டிலேயே பராமரிப்பது, தீவிர சிகிச்சையில் உதவி, மாதிரிகள் சேகரிப்பு, மருத்துவ தொழில்நுட்பக் கலைஞர்கள், புதிய உபகரணங்களை கையாளுவது போன்றவை தொடர்பான பொதுவான பணிகளுக்கு இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள். புதிதாக வரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கு திறன் மேம்படுத்தப்படும். இந்த இயக்கத்தின் மூலம், கொரோனாவுக்கு எதிராகப் போராடும் நமது சுகாதாரத் துறையின் முன்களப் படைக்கு புதிய ஊக்கம் கிடைக்கும். மேலும், நமது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நண்பர்களே,

திறன் வளர்ப்பு, மீண்டும் பயிற்சி, திறன் மேம்பாடு என்ற கருத்தின் முக்கியத்துவம், கொரோனா காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் பணியாற்றுவோர் ஏற்கனவே திறன்பெற்றவர்கள்தான். எனினும், கொரோனாவை எதிர்கொள்ள அவர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். தற்போதைய மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, உங்களது திறனை மேம்படுத்துவது அல்லது மதிப்பு கூட்டுவது என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம்.

 

தற்போதைய தேவையின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் இந்தியா இயக்கம் பயிற்சி அளித்து வருகிறது. இதுகுறித்து அதிகம் பேசப்படாவிட்டாலும், கொரோனா காலத்தில் இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நாட்டுக்கு மிகப்பெரும் பலத்தை அளித்துள்ளன. கொரோனா என்ற சவாலை கடந்த ஆண்டு நாம் எதிர்கொள்ளத் தொடங்கியது முதலே, நாடு முழுவதும் லட்சக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முக்கிய பணியை திறன் மேம்பாட்டு அமைச்சகம் செய்துள்ளது.

நண்பர்களே,

நமது சுகாதாரத் துறையின் மிகவும் வலுவான தூண்கள் குறித்தும் இன்றைய நிகழ்ச்சியில் பேச விரும்புகிறேன். நமது இந்தத் தோழர்களை அடிக்கடி விவாதங்களில் சேர்க்காமல் விட்டுவிடுகிறோம். நமது சுகாதாரப் பணியாளர்களான இவர்கள், கிராமங்களில் ஆஷா, ஏஎன்எம், அங்கன்வாடிகள், மருந்தகங்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பது முதல் உலகின் மிகப்பெரும் தடுப்பூசி போடும் பணிகள் வரை பல்வேறு வழியிலும் மிகவும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். எந்தவொரு மோசமான வானிலையிலும், போதிய போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் இல்லாத புவிஅமைப்பு இருந்தாலும், இந்தத் தோழர்கள் நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்புக்காக இரவு-பகலாக உழைக்கின்றனர். கிராமங்களில் தொற்று பரவலைத் தடுக்கவும், தொலைதூர, மலைப்பகுதி மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கும் மிகப்பெரும் பங்களிப்பை இந்தத் தோழர்கள் செய்து வருகின்றனர். நாட்டில் ஜூன் 21-ல் விரிவாக்கம் செய்யப்படும் தடுப்பூசி இயக்கத்துக்கு இந்த தோழர்கள் அனைவரும் பலத்தையும், சக்தியையும் அளிக்கின்றனர். இன்று அவர்களை பொதுவெளியிலேயே நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

ஜூன் 21-ல் தொடங்கவுள்ள தடுப்பூசி இயக்கம் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பெற்றுவந்த அதே வசதியை, 18 வயதுக்கும் மேற்பட்டவர்களும் பெற உள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, ஆறு அடி இடைவெளி ஆகியவை மிகவும் முக்கியம். கடைசியாக, இந்த குறுகியகால பயிற்சியை மேற்கொள்ளும் இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெறும் புதிய திறன்கள், நாட்டு மக்களின் உயிரைக் காக்க மிகப்பெரும் அளவில் உதவும். முதலாவது பணியாக, மனிதஉயிர்களை காக்கும் சேவையில் ஈடுபடுவது உங்களுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கும். நீங்கள் பணியில் சேர்ந்தால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இரவு-பகலாக பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிம்மதி கிடைக்கும். அவர்களுக்கு புதிய பலம் கிடைக்கும். இந்த வகுப்புகள், உங்களது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளுடன் வருகின்றன. பொது நலனுக்காக மனிதசமூகத்துக்குப் பணியாற்ற நீங்கள் சிறப்பு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். இந்தப் பயிற்சி வகுப்புகள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் விரைவில் பெறுவீர்கள்! ஒவ்வொருவரின் உயிரைக் காப்பாற்ற உங்களது திறன் பயன்படட்டும்! இதற்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றிகள் பல!

விளக்கம்: இது பிரதமர் இந்தி மொழியில் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு.

==================================


(Release ID: 1729376) Visitor Counter : 267