உள்துறை அமைச்சகம்
சைபர் பண மோசடிகள் குறித்து புகார் செய்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் தேசிய உதவி எண் 155260 தொடக்கம்
Posted On:
17 JUN 2021 7:38PM by PIB Chennai
பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சூழலியலை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியை நிலைநாட்டும் விதமாக, சைபர் குற்றங்களின் காரணமாக ஏற்படும் நிதி இழப்பு குறித்து புகார் தெரிவிப்பதற்கான தேசிய உதவி எண் 155260-வை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஆன்லைன் மோசடிகள் மூலம் இழந்தவர்கள் புகாரளிப்பதற்கான வசதியை இந்த தேசிய உதவி எண் வழங்குகிறது.
2021 ஏப்ரல் 1 அன்று சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த உதவி எண் வசதியை, ரிசர்வ் வங்கி, அனைத்து முக்கிய வங்கிகள், கட்டண வங்கிகள், வாலெட்டுகள் மற்றும் ஆன்லைன் வணிகர்களின் பேராதரவுடன் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
155260 உதவி எண் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் ரூ 1.85 கோடி மதிப்புடைய மோசடி செய்யப்பட்ட பணம் (தில்லியில் ரூ 58 லட்சம், ராஜஸ்தானில் ரூ 53 லட்சம்), மோசடி பேர்வழிகளின் கைகளை சென்றடைவதற்கு முன் மீட்கப்பட்டது.
கீழ்காணும் விதத்தில் இந்த உதவி எண்ணும் அது தொடர்பான தளமும் செயல்படுகிறது:
அ. தொடர்புடைய மாநில காவல்துறையால் இயக்கப்படும் 155260 உதவி எண்ணை சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொள்ளலாம்.
ஆ. அழைத்தவரின் பரிவர்த்தனை தகவல்கள் மற்றும் அடிப்படை தனிப்பட்ட தகவல்களை குறித்து கொள்ளும் காவல் செயல்பாட்டாளர், குடிமக்கள் நிதி சைபர் மோசடி தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் டிக்கெட் முறையில் அதை பதிவு செய்வார்.
இ. தொடர்புடைய வங்கிகள், வாலெட்டுகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு அந்த டிக்கெட் சென்றடையும்.
ஈ. ஒப்புகை எண்ணோடு குறுந்தகவல் ஒன்று பாதிக்கப்பட்ட நபருக்கு அனுப்பப்படும். அதை கொண்டு, தேசிய சைபர் குற்றங்கள் தகவல் தளத்தில் (https://cybercrime.gov.in/) 24 மணி நேரத்தில் மோசடி குறித்த முழு தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
உ. தன்னுடைய தகவல் தளத்தில் டிக்கெட்டை காணும் வங்கி, உட்புற அமைப்புகளில் விவரங்களை சரி பார்க்கும்.
ஊ. மோசடி செய்யப்பட்ட பணம் வங்கியில் இன்னும் இருக்கும் பட்சத்தில், அதை மோசடிதாரர் எடுக்க முடியாத படி வங்கி செய்யும். பணம் மற்றொரு வங்கிக்கு சென்றிருந்தால், அந்த வங்கிக்கு டிக்கெட் அனுப்பப்படும். மோசடிதாரரின் கைகளுக்கு பணம் சென்றடைவது தடுக்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்.
அனைத்து முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தற்போது இந்த தளத்தில் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, இண்டஸ் இந்த், எச் எஃப் டி சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ், யெஸ் மற்றும் கோடக் மகிந்திரா உள்ளிட்ட வங்கிகள் இதில் அடங்கும். பேடிஎம், போன்பே, மொபிகிவிக், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட முக்கிய வாலெட்டுகள் மற்றும் வணிகர்களும் இதில் இணைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727990
-----
(Release ID: 1728044)
Visitor Counter : 2660