தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மேம்படுத்துவதில் அரசு உறுதி: மத்திய அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார்

Posted On: 17 JUN 2021 1:30PM by PIB Chennai

சிறந்த வாய்ப்புகளுக்காக நிலையான உறுதித் தன்மையுடன் பெண்கள், பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதில் இந்தியா உறுதிபூண்டிருப்பதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு இடையேயான பாலத்தை மேம்படுத்தவும், எதிர்கால பணிகளுக்குத் தகுந்தவாறு இளைய சமுதாயத்தைத் தயார்படுத்தும் வகையிலும், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

திறன் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவுத் திட்டங்கள் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளும் திட்டங்களும் செயல்பட்டுவருகின்றன.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் யுனிசெஃப் இடையேயான விருப்ப ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்ட பின் பேசிய அமைச்சர், தமது அமைச்சகம், யுனிசெஃப் மற்றும் தொடர்புடைய இணைப்பு உறுப்பினர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து, அதில் பங்கேற்கும் வகையில் பெருவாரியான வாய்ப்புகளை நமது இளம் சந்ததியினருக்கு ஏற்படுத்தித் தர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக சம்பந்தப்பட்ட திறன்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்குவதற்காக அமைச்சகம் மற்றும் யுனிசெஃப் இடையே உருவாகியுள்ள கூட்டணி முயற்சியைப் பாராட்டிய திரு கங்வார், கொள்கை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்கள் மற்றும் இளைஞர்கள் இடையேயான நேரடிக் கருத்துப் பரிமாற்றம் மற்றும் பின்னூட்ட முறையை ஏற்படுத்துவதன் துவக்கப் புள்ளியாக இந்தக் கூட்டணி அமைந்திருப்பதாகக் கூறினார்.

இந்தியா, இளைஞர்களின் நாடு என்று அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஐந்தாவது நபரும் இளைஞர் (15-24 வயதினர்) என்று 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தொழிற்பயிற்சி சேவை, வேலைவாய்ப்புகள் மற்றும் இளைஞர்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தொழிற்பயிற்சி ஆலோசனை, தொழிற்கல்வி வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பற்றிய தகவல்கள், பணிப் பயிற்சிஉள்ளிருப்புப் பயிற்சி உள்ளிட்ட வேலைவாய்ப்பு சம்பந்தமான ஏராளமான சேவைகளை அந்த அமைப்பு வழங்கிவருகிறது.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் திரு அபூர்வா சந்திரா, சிறப்புச் செயலாளர் திருமிகு அனுராதா பிரசாத், யுனிசெஃப் பிரதிநிதி டாக்டர் யாஸ்மின் அலி ஹக், அமைச்சகம் மற்றும் யுனிசெஃப் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727860

----


(Release ID: 1727901) Visitor Counter : 386