ஜல்சக்தி அமைச்சகம்
மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு ஆதரவு கோரி, அனைத்து எம்.பிக்களுக்கும் ஜல்சக்தி இணையமைச்சர் கடிதம்
Posted On:
15 JUN 2021 2:30PM by PIB Chennai
‘‘ஜல்சக்தி திட்டம்: மழைநீர் சேகரிப்போம்’’ பிரசாரத்துக்கு தங்கள் தொகுதிகள் மற்றும் மாநிலங்களில் ஆதரவு தெரிவிக்கும்படி அனைத்து எம்.பி.க்களுக்கும் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா கடிதம் அனுப்பியுள்ளார். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி வைத்தார்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது, குளங்கள் மற்றும் நீர் நிலைகளை சீரமைப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, தடுப்பணைகள் அமைப்பது, சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகளை சீரமைப்பது போன்றவற்றை மேற்கொள்வதே இந்த பிரசாரத்தின் நோக்கம். நாட்டில் உள்ள நீர்நிலைகள் பற்றி மாவட்ட அளவில் அறிவியல் பூர்வமாக தரவுகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் விவரங்கள், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் எம்.பிக்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.பி.க்களின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் தூதுவராக ஒவ்வொரு எம்.பி.யும் மாற வேண்டும் என வலியுறுத்துவதற்காக இந்த கடிதம் அனுப்பட்டுள்ளதாக திரு ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தார். நிலத்தடி நீர்மட்டம் குறைவது, தண்ணீர் பற்றாக்குறை போன்ற பொதுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14,000 கோடி மதிப்பில், நீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் 1,256 மழைநீர் சேககரிப்பு அமைப்புகளை புதுப்பித்துள்ளது. 1.02 லட்சம் புதிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மழைநீர் சேகரிப்பு பிரசாரத்தை பிரதமர் முன்னின்று நடத்துவதாகவும், இதில் தீவிரமாக பங்கேற்று, இந்த பிரசாரத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என 2.5 லட்சம் கிராமத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் கடிதம் எழுதியுள்ளதாகவும் திரு ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்துள்ளார். பிரதமரின் முயற்சிகள் நீர் பாதுகாப்பு துறையில், உறுதியான தீர்மானத்தை தெரிவிப்பதாகவும், திரு ரத்தன் லால் கட்டாரியா கூறினார். ‘‘இந்த உண்மையான முயற்சிகளுடனும், மக்கள் ஆதரவுடனும், தண்ணீர் இயக்கத்தை, மக்கள் இயக்கமாக விரைவில் மாற்ற முடியும் என நான் நம்புகிறேன்’’ என அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727191
(Release ID: 1727253)
Visitor Counter : 211