பிரதமர் அலுவலகம்
ஐ.நா. ‘பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை‘-யில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் வனப் பரப்பின் அளவு கூடுதலாக சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த வனப்பரப்பும், ஏறத்தாழ நாட்டின் மொத்த நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது : பிரதமர்
நிலச் சீரழிவை சமன்படுத்துவதென்ற தேசிய வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது : பிரதமர்
2.5 முதல் 3 பில்லியன் டன் கரியமில வாயுக்கு இணையாக, கூடுதல் கரிம ஒழிப்பு இலக்கை அடைய, 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலங்கள் 2030-க்குள் மேம்படுத்தப்படும்
நிலச் சீரழிவு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக அறிவியல் அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கு, இந்தியாவில் உயர்சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது
நமது எதிர்கால சந்ததியினருக்காக, ஆரோக்கியமான கிரகத்தை விட்டுச் செல்வது, நமது புனிதக் கடமையாகும் : பிரதமர்
Posted On:
14 JUN 2021 8:21PM by PIB Chennai
ஐ.நா. - ‘பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை‘-யில் பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. உடன்படிக்கை நாடுகளின் (UNCCD) 14-வது அமர்வின் தலைவர் என்ற முறையில், பிரதமர் இந்த அமர்வின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அனைத்து உயிரினங்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான அடிப்படைக் கட்டடமைப்பாகத் திகழ்வது நிலம் என்று குறிப்பிட்ட திரு.மோடி, நிலம் மற்றும் அதன் ஆதாரங்கள் மீது, பெருமளவிலான அழுத்தம் கொடுப்பதைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “நம் முன்பாக, ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. ஆனால், நாம் அதனை செய்ய முடியும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும் “ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நிலம் சீரழிவதைத் தடுக்க இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகளை பிரதமர் பட்டியலிட்டார். நிலம் சீரழிவு குறித்து சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்குக் கொண்டுவருவதில், இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2019 தில்லிப் பிரகடனம், நிலங்களை எளிதில் அணுகுதல் மற்றும் அவற்றைக் கவனிப்பதுடன், பாலின உணர்திறன் உடைய புரட்சிகரமான திட்டங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில், கூடுதலாக சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் வனமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வனப்பகுதிகளின் பரப்பளவு, நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவில் நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
நிலச் சீரழிவை சமன்படுத்துவதென்ற தேசிய உறுதிப்பாட்டை அடைவதற்கான வழிமுறைகளை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும் திரு.மோடி தெரிவித்தார். “26 மில்லியன் ஹெக்டேர் அளவிலான சீரழிந்த நிலங்களை, 2030-ம் ஆண்டுக்குள் மேம்படுத்தவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். 2.5 முதல் 3 பில்லியன் டன் கரியமில வாயுக்கு இணையாக, கூடுதல் கரிம ஒழிப்பு இலக்கை அடைவதென்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற இது உதவும்“ என்றும் பிரதமர் தெரிவித்தார்.
குஜராத்தின் கட்ச் சதுப்புநிலப் பகுதியில் உள்ள பன்னி பிராந்தியம், ஆரோக்கியமான தன்மையுடைய சிறந்த மண்ணாக ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதை உதாரணமாக சுட்டிக்காட்டிய பிரதமர், நில உற்பத்தித்திறன் அதிகரிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரம் போன்றவை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பன்னி பிராந்தியத்தில், புல்வெளிகளை உருவாக்கியதன் மூலமாக நிலம் சீரமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நடவடிக்கை, நில மேம்பாட்டு சமன்படுத்தலை அடைய உதவிகரமாக உள்ளது. அத்துடன், கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதன் வாயிலாக, மேய்ச்சல் நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் இது உறுதுணையாக இருக்கிறது. “உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வேளையில், அதே உணர்வுடன், நிலங்களை சீரமைப்பதற்கான வலுவான உத்திகளை வகுப்பதும் அவசியம்“ எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு அமைப்பின் உணர்வுடன், நிலச் சீரமைப்பு உத்திகளை வகுக்குமாறு, சக வளரும் நாடுகளுக்கும் இந்தியா உதவி வருகிறது. நிலச் சீரழிவு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான, அறிவியல் அணுகுமுறைகளை ஊக்குவிப்பதற்கென, இந்தியாவில் உயர் சிறப்பு மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். “மனிதர்களின் செயல்பாடுகளால் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்வது, மனிதகுலத்தின் கூட்டுப்பொறுப்பு. நமது வருங்கால சந்ததியினருக்கு, ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்வது நமது புனிதக் கடமை“ என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.
*****
(Release ID: 1727190)
Visitor Counter : 388
Read this release in:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam