பிரதமர் அலுவலகம்

ஜி7 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 12 JUN 2021 11:07PM by PIB Chennai

ஜி7 உச்சி மாநாட்டின் முதலாவது அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார்.

சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைத்தல்- சுகாதாரம்என்ற தலைப்பிலான அமர்வு, கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு வருவதிலும், எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான நிலைத்தன்மையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது.

கூட்டத்தின் போது,  இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட கொவிட் தொற்று அலையின் போது ஜி7 மற்றும் இதர நாடுகள் அளித்த ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் 'முழுமையான சமூகஅணுகுமுறையால், அரசு, தொழில்துறை மற்றும் பொது சமூகத்தின் அனைத்து நிலைகளின் நடவடிக்கைகளும் ஒன்றிணைக்கப்பட்டதாக அவர் எடுத்துக் கூறினார்.

தடம் அறிதல் மற்றும் தடுப்பூசியின் மேலாண்மையில் திறந்த ஆதார மின்னணுக் கருவிகளை இந்தியா வெற்றிகரமாகப் பயன்படுத்தியதைப் பற்றி பிரதமர் விரிவாக எடுத்துரைத்ததுடன், தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இதர வளரும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச மருத்துவ ஆளுகையை மேம்படுத்தும் கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். கொவிட் சம்மந்தமான தொழில்நுட்பங்களுக்கு டிரிப்ஸ் விலக்கு அளிக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மற்றும் தென் ஆப்பரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கைக்கு, ஜி7 நாடுகளின் ஆதரவை அவர் வேண்டினார்.

ஒரே பூமி, ஒரே சுகாதாரம்”, என்ற கருத்தை இன்றைய கூட்டம் ஒட்டுமொத்த உலகிற்கும் வழங்க வேண்டும் என்று பிரதமர் திரு மோடி கூறினார். எதிர்கால பெருந்தொற்றுகளைத் தடுப்பதற்காக சர்வதேச ஒருமைப்பாடு, தலைமைத்துவம், ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த பிரதமர், இதுதொடர்பாக ஜனநாயக மற்றும் வெளிப்படைத் தன்மையிலான சமூகங்களின் சிறப்பு பொறுப்புணர்ச்சியையும் வலியுறுத்தினார்.

ஜி7 உச்சி மாநாட்டின் இறுதி நாளான நாளை இரண்டு அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பார்.

••••••••••••••••



(Release ID: 1726777) Visitor Counter : 223