எரிசக்தி அமைச்சகம்
இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகத்தின் தடுப்பூசி முகாம்கள் நாடு முழுவதும் தீவிரம்
Posted On:
12 JUN 2021 5:14PM by PIB Chennai
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகம், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடும் வகையில் அனைத்து பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு உதவிகளை அளித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகத்தின் மேற்கு மண்டலம்-I, நாக்பூர் நகராட்சியுடன் இணைந்து அங்கு ஓர் தடுப்பூசி முகாமை நடத்தியது. ஊழியர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 40 பேர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். வோக்ஹார்ட் மருத்துவமனையுடன் இணைந்து நாக்பூரில் நடைபெற்ற மற்றொரு முகாமில் 143 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மும்பையின் ஹிராநந்தனி மருத்துவமனையுடன் இணைந்து நவி மும்பை மற்றும் மும்பையில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் உட்பட மொத்தம் 55 பேருக்குக் கடந்த 10-ஆம் தேதி மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.
ரூர்கேலாவில் உள்ள இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகத்தின் துணை மின் நிலையம், ரூர்கேலா நகராட்சி அமைப்புடன் இணைந்து அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் கொவிட்- 19 தடுப்பூசியை செலுத்துவதற்கு பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டது. 100 பேருக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தடுப்பூசியும் போடப்பட்டது. இதன்மூலம் ரூர்கேலா துணை மின் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726567
----
(Release ID: 1726621)
Visitor Counter : 195