சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஐ நா சபையின் 75 வது அமர்வில் எச்ஐவி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 11 JUN 2021 10:27AM by PIB Chennai

டாக்டர் ஹர்ஷ் வர்தன்,  ஐக்கிய நாடுகள் சபையின்  75வது அமர்வில், காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார் .
 
எச்.ஐ.வி/எய்ட்ஸ் மீதான உறுதிப்பாட்டு பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த அரசியல் அறிவிப்புகள் தொடர்பான  75/260 தீர்மானம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் பேசினார் .
 
அவரது உரை பின்வருமாறு:

” ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இந்த மதிப்புமிக்க மன்றத்தில் இன்று உரையாற்றுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது அரசின் சார்பாக, உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தக் கூட்டத்தைத் திட்டமிடுவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. எய்ட்ஸ் தொடர்பான இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பதில் மகிழ்ச்சி.

எச்.ஐ.வி தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது பொதுவான கருத்து என்றாலும், தொற்றுநோய்கள் மீண்டும் உயிர்ப்பிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன, எனவே, தொடர்ந்து விழிப்புடன், சரியான நேரத்தில் தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும்.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருந்து பெறுவதை உறுதி செய்வதற்காக, இந்த கொவிட்-19 இன் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து, அயராது பணியாற்றிய முன்களத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள்  மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி எனது உரையைத் தொடங்குகிறேன்.  சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த காலகட்டத்தில் எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களுக்கு  நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தில், ஏற்றத்தாழ்வுகளையும்,  இடைவெளிகளையும் சரி செய்வதற்கு வலுவான அரசியல் தலைமை மிகவும் முக்கியமானது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. கொவிட்-19 தொற்றுகாலத்தில்,  எச்.ஐ.வி சேவைகள் பாதிக்கப்படாமலிருக்க சமூகங்கள், சிவில் சமூகம் மற்றும் மேம்பாட்டு பங்காளர்களை ஈடுபடுத்தி இந்தியா விரைவான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தது.  இந்தியாவில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், 2017, தொற்றாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க, சட்டபூர்வமான மற்றும் செயல்படுத்தும் கட்டமைப்பை வழங்குகிறது.

இந்தியாவின் தனித்துவமான எச்.ஐ.வி தடுப்பு மாதிரியானது,  'சமூக ஒப்பந்தம்' என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது.  இதன் மூலம் சிவில் சமூகத்தின் ஆதரவுடன் 'இலக்கு நோக்கிய திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.  நடத்தை மாற்றம், தகவல் தொடர்பு,  பாதிக்கப்பட்டோரை சென்றடைதல், சேவை வழங்கல், ஆலோசனை, சோதனை போன்ற எச்.ஐ.வி பராமரிப்புக்கான இணைப்புகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம்.

14 லட்சம் மக்களுக்கு இந்தியா இலவசமாக ஆன்டி- ரெட்ரோ-வைரல் சிகிச்சையை வழங்குகிறது.  இந்திய மருந்துகள்,  ஆப்பிரிக்காவில்  எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை சென்றடைகின்றன.  சென்றடைவதற்கு கடினமான, பாதிக்கப்படக்கூடிய மக்களின் மீது கவனம் செலுத்துவதற்காக, இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டமானது,  திருத்தப்பட்டு, புத்துயிர் அளிக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டுள்ளது.  எச்.ஐ.வி உடன் வாழும் மக்களை, படிப்படியாக, பாதுகாப்பான மற்றும் திறமையான ஆன்டி-ரெட்ரோ-வைரல் மருந்து முறையான டோலூடெக்ராவிருக்கு மாற்றுகிறோம்.

வைரல்-லோடு சோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் எச்.ஐ.வி ஆலோசனை, பரிசோதனை மற்றும் ஆரம்பகால நோயறிதலுக்கான சமூக அடிப்படையிலான பரிசோதனை ஆகியவை எச்.ஐ.வி நோய், தாயிலிருந்து குழந்தை பரவுவதைத் தடுப்பது என்ற இலக்கை அடைவதற்காக விரைவுபடுத்தப்பட்டுள்ளன. 'அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்' என்ற இந்திய அரசின் குறிக்கோளுக்கு இணங்க, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், எச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஆதரவைத் திரட்டுவதற்காக பொது மற்றும் தனியார் துறை தொழில்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த பயங்கரமான நோயுடன் வாழும்  மக்களை நூறு சதவிகிதம் சென்றடைய, எச்.ஐ.வி சிகிச்சையை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால், இலக்கை அடைய 115 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், எச்.ஐ.வி பரவுதலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம் . எங்களது ஒரு நீண்ட பயணம். பெரிய பொது சுகாதார அச்சுறுத்தலாக உள்ள எய்ட்ஸ் தொற்றுநோயை 2030க்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிலையான மேம்பாட்டு இலக்கை அடைவதற்கு, எங்கள் சவால்களையும் இடைவெளிகளையும் முன்கூட்டியே கண்டறிந்து அடையாளம் காண வேண்டும்;  எங்கள் திட்டத்தை தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும்; அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்;  சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எச்.ஐ.விக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726142

**************



(Release ID: 1726201) Visitor Counter : 942