வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சி

Posted On: 10 JUN 2021 1:09PM by PIB Chennai

2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த 3 நிதியாண்டுகளாக தேக்க நிலையில் இருந்த வேளாண் மற்றும் துணை பொருட்களின் ஏற்றுமதி (கடல்சார் பொருட்கள் மற்றும் தோட்ட பொருட்கள் உட்பட) 2020-21ம் நிதியாண்டில் 41.25 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது 17.34 சதவீத வளர்ச்சி.

2019-20ம் ஆண்டில், ரூ.2.49 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில் ரூ.3.05 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 22.62 சதவீத வளர்ச்சி.

இந்தியாவின் வேளாண் மற்றும் துணை பொருட்களின் இறக்குமதி கடந்த 2019-20ம் ஆண்டில், 20.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020-21ம் ஆண்டில் இது 20.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

கொவிட் தொற்றுக்கு இடையிலும் வர்த்தக சமநிலை 14.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20.58 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 42.16 சதவீத வளர்ச்சி

கடல்சார் மற்றும் தோட்ட பொருட்கள்  தவிர இதர வேளாண் பொருட்கள் கடந்த 2020-21ம் ஆண்டில் 29.81 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.36 சதவீத வளர்ச்சி.

கொவிட்-19 தொற்று காலத்தில், முக்கிய உணவு பொருட்களின் தேவை அதிகரித்ததை, இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

உணவு தானியங்களின் ஏற்றுமதியும் அதிக வளர்ச்சி கண்டது. பாசுமதி வகை அல்லாத அரிகளின் ஏற்றுமதி மதிப்பு 4794.54 மில்லியன் அமெரிக்க டாலர். இது 136.04 சதவீத வளர்ச்சி. கோதுமை 549.16 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 774.17 சதவீத வளர்ச்சி.

கம்பு, சோளம் போன்ற இதர உணவு தானியங்களின் ஏற்றுமதி 694.14 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 238.28 சதவீத வளர்ச்சி.

இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியும், கடந்த 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. புண்ணாக்கு வகைகள் 1675.34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 90.28 சதவீத வளர்ச்சி. சர்க்கரை 2789.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், பருத்தி 1897.20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், காய்கறிகள்  721.47 மில்லியன் டாலருக்கும், சமையல் எண்ணெய்  602.77 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி  254.39 சதவீதம்.

இந்திய வேளாண்  பொருட்களை அமெரிக்க, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தோனேஷியாவுடனான ஏற்றுமதி வளர்ச்சி 102.42 சதவீதமாகவும், வங்கதேசத்துடனான வளர்ச்சி 95.93 சதவீதமாகவும், நேபாளத்துடனான வளர்ச்சி 50.49 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இஞ்சி, மிளகு, பட்டை, ஏலக்காய், மஞ்சள், குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்களின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் மசாலா பொருட்களின் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

ஆர்கானிக் பொருட்களின் ஏற்றுமதி 2020-21ம் ஆண்டில் 1040 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சி 50.94 சதவீதம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725891

 

------(Release ID: 1725954) Visitor Counter : 413