நிதி அமைச்சகம்

காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து பைசல் செய்வது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சந்திப்பு

Posted On: 05 JUN 2021 4:51PM by PIB Chennai

கொவிட்-19-ஐ எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு தொகுப்பு காப்பீட்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளில் நிலுவையில் உள்ளவற்றை விரைந்து பைசல் செய்வது தொடர்பாகவும் காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்களை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் இன்று சந்தித்தார்.

கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதற்காக திட்டங்களின் செயல்முறை மற்றும் ஆவணத் தேவைகளை முறைப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு தொகுப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 419 கோரிக்கைகள் இது வரை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ரூ 209.5 கோடி காப்பீட்டுதாரர்களின் வாரிசுகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மாநிலங்களிடம் இருந்து ஆவணங்கள் கிடைக்கப் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநில சுகாதார அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாவட்ட நீதிபதியின் சான்றிதழ் போதுமானது.

பெருந்தொற்று தொடங்கியது முதல் (2020 ஏப்ரல் 1) இன்று வரை பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தின் கீழ் 4.65 லட்சம் கோரிக்கைகளுக்கு ரூ 9,307 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 99 சதவீத பைசல் விகிதத்துடன் 1.2 லட்சம் கோரிக்கைகளுக்கு ரூ 2,403 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

இறந்து போன காப்பீட்டுதாரர்களின் வாரிசுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் குறிப்பாக பெருந்தொற்றின் போது காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் சுரக்‌ஷா காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளையும் ஆய்வு செய்த நிதி அமைச்சர், 2021 மே 31 வரை 82,660 கோரிக்கைகள் பைசல் செய்யப்பட்டு ரூ 1,629 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1724706

*****************



(Release ID: 1724752) Visitor Counter : 229