நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் மே மாதத்தில் 55 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன: திரு பாண்டே தகவல்

Posted On: 03 JUN 2021 6:22PM by PIB Chennai

பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ், கடந்த மே மாதம் 55 கோடி பேரும், ஜூன் மாதத்தில் இதுவரை 2.6 கோடி பயனாளிகளும் இலவச உணவு தானியங்களை பெற்றுள்ளனர் என மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலாளர் திரு சுதன்சு பாண்டே தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டம் (PMGKAY-III) மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி திரு சுதன்சு பாண்டே இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது. 

பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மே மற்றும் ஜூன் மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உணவு தானியங்களில் சுமார் 80 சதவீதம் அதாவது 63.67 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்களை மாநிலங்கள் பெற்றுள்ளன.

சுமார் 28 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 55 கோடி பயனாளிகளுக்கு கடந்த மே மாதம் வழங்கியுள்ளன.

ஜூன் மாதத்தில் இதுவரை 2.6 கோடி பயனாளிகளுக்கு  சுமார் 1.3 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் 90 சதவீத பயனாளிகளுக்கும், ஜூன் மாதத்தில் 12 சதவீத பயனாளிகளுக்கும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான உணவு மானியம் ரூ.13,000 கோடி. பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ், மே மற்றும் ஜூன் மாதத்தில், ரூ.9,200 கோடிக்கு மேல் மானியமாக செலவிடப்பட்டுள்ளது.

இந்த கொவிட் நெருக்கடி சூழலில், தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் பெறுவதை உறுதி செய்யவும், இந்த பலன்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வகையில், இத்திட்டத்தை முழு வீச்சில் அமல்படுத்தவும்  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை, தொடர்ந்து காணொலி காட்சி மூலமாகவும், கடிதங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறது. 

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724128

*****************


(Release ID: 1724203) Visitor Counter : 211