வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 50,000 ஆனது

Posted On: 03 JUN 2021 3:25PM by PIB Chennai

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தொடக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 50,000-ஐ எட்டியுள்ளது.

தொடக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ஸ்டார்ட் அப் இந்தியாஎன்ற திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் முன்னணி திட்டங்களில் இதுவும் ஒன்று.

இந்த தொடக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை(DPIIT) அங்கீகாரம் அளிக்கிறது. இன்று வரை, நாடு முழுவதும் 50,000 தொடக்க நிறுவனங்களுக்கு டிபிஐஐடி அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஏப்ரல் 1ம் தேதி முதல் 19,896 தொடக்க நிறுவனங்களுக்கு டிபிஐஐடி அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, அங்கீகரிக்கப்பட்ட தொடக்க நிறுவனங்கள் நாடு முழுவதும் 623 மாவட்டங்களில் பரவியுள்ளன. தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறிப்பிட்ட கொள்கைகளை அறிவித்துள்ளன.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் தொடக்க நிறுவனங்கள் உள்ளன.

கடைசி 10,000 தொடக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்க 180 நாட்கள்தான் ஆனது. முதல் 10,000 தொடக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்க 808 நாட்கள் ஆனது குறிப்பிடத்தக்கது. 743 தொடக்க நிறுவனங்கள் கடந்த 2016-17ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் 2020-2021ம் ஆண்டில் 16,000 தொடக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன.

48,093 தொடக்க நிறுவனங்கள் 5,49,842 வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளன. சராசரியாக ஒரு தொடக்க நிறுவனத்துக்கு 11 ஊழியர்கள் உள்ளனர். 2020-21ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.7 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 பதிவு செய்யப்பட்ட தொடக்க நிறுவனங்களில் பெரும்பாலானவை, உணவு பதப்படுத்துதல், உற்பத்தி வளர்ச்சி, செயலி மேம்பாடு, ஐடி ஆலோசனை மற்றும் வர்த்தக சேவை துறைகளைச் சார்ந்தவை. 45 சதவீத தொடக்க நிறுவனங்களில் பெண்கள் தொழில்முனைவோர்களாக உள்ளனர். இது  பெண்கள் தங்கள் எண்ணங்களை தொடக்க நிறுவனங்களாக்கும் போக்கை ஊக்குவிக்கும்.  

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724043

*****************



(Release ID: 1724098) Visitor Counter : 270