உள்துறை அமைச்சகம்

யாஸ் புயல் ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஆய்வு

Posted On: 24 MAY 2021 2:05PM by PIB Chennai

வங்க கடலில் உருவாகியுள்ள யாஸ் புயலை எதிர்கொள்ளும் தயார் நிலை குறித்து ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரப்பிரதேசம் முதல்வர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்களுடன்  மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா காணொலி காட்சி மூலம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி நேற்று கூட்டிய உயர் நிலை ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டம் நடந்தது.

புயல் பாதிப்பு மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த திரு அமித்ஷா, அனைத்து கொவிட்-19 மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், தடுப்பூசி சேமிப்பு கிடங்குகளில்  மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்கள் வசதிகளுக்கு போதிய ஏற்பாடுகளை செய்யும்படி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடம் வலியுறுத்தினார்.  புயலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம் என்பதால், மருத்துவமனைகளில், அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்கவும் அவர் வலியுறுத்தினார்.

புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் இதர முகாம்களில் உள்ள நோயாளிகளை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும் போதிய ஏற்பாடுகளை செய்யும்படி அவர் வலியுறுத்தினார். டவ்தே புயலின் போது மேற்கு கடலோர பகுதியில் இது போன்ற ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டதால், எந்த மருத்துவமனையிலும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். 

மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி் ஆலைகளில் புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் திரு.அமித்ஷா ஆய்வு செய்தார். இரண்டு நாட்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை இருப்பு வைக்கும்படியும், பிற மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் டேங்கர்களை முன்கூட்டியே அனுப்புவதை திட்டமிடவும் அவர் அறிவுறுத்தினார். ஆக்ஸிஜன் ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியும் மாநில அரசுகளை திரு. அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

கிழக்கு கடலோர பகுதியில், கப்பல்கள், மீன்பிடி படகுகள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பாதுகாப்பு, குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.   அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக கரை திரும்புவதையும்தாழ்வான பகுதிகள், பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதையும் உறுதி செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தயார் நிலையையும் மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.  

மின் மற்றும் தொலைதொடர்பு சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிப்பு ஏற்பட்டால், குறித்த நேரத்தில் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும்  உள்துறை அமைச்சர் வலியுறுத்தினார். மிகப் பெரிய மரங்களின் கிளைகளை, சரியான நேரத்தில் வெட்டுவது, பாதிப்பை குறைக்க உதவும் எனவும் அவர் கூறினார்.

புயலால் பாதிக்கப்படும்  மாநிலங்களுக்கு, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என திரு அமித்ஷா உறுதி அளித்தார். இதற்கான உத்தரவுகளையும், அவர் மூத்த அதிகாரிகளுக்கு பிறப்பித்தார். நிலைமையை சமாளிக்க, அரசு மற்றும் தனியார் வசதிகள் முடிந்த அளவு  பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் 24 மணி நேர, கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாகவும், அதை எந்த உதவிக்கும்மாநிலங்கள் எப்போது வேண்டுமானாலும்தொடர்பு கொள்ளலாம் என திரு அமித்ஷா கூறினார்.

புயல் மீட்பு பணிக்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை, கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

மாநில அரசின் தயார்நிலை முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவ இந்த கூட்டம் கூட்டப்பட்டதற்கு ஒடிசா முதல்வர் நன்றி தெரிவித்தார். புயல் பாதிப்பை குறைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க முதல்வர் கூறினார். மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர முதல்வர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இந்தப் புயல், பெரியளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என இதன் துணை நிலை ஆளுநர்மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721231

*****************



(Release ID: 1721270) Visitor Counter : 177