மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஐஐஎஸ்சி, ஐஐடிகள், ஐஐஐடிகள், ஐஐஎஸ்ஈஆர் மற்றும் என்ஐடிகளின் இயக்குநர்களுடன் கொவிட் மேலாண்மை நிலவரம் மற்றும் ஆன்லைன் கல்வி முறை குறித்த கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் தலைமை தாங்கினார்

Posted On: 20 MAY 2021 5:26PM by PIB Chennai

ஐஐஎஸ்சி, ஐஐடிகள், ஐஐஐடிகள், ஐஐஎஸ்ஈஆர் மற்றும் என்ஐடிகளின் இயக்குநர்களுடன் கொவிட் மேலாண்மை நிலவரம் மற்றும் ஆன்லைன் கல்வி முறை குறித்து காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' இன்று தலைமை தாங்கினார்.

மத்திய கல்வி துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, உயர்கல்வித்துறை செயலாளர், ஐஐஎஸ்சி, ஐஐடிகள், ஐஐஐடிகள், ஐஐஎஸ்ஈஆர் மற்றும் என்ஐடிகளின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிறுவனங்களில் கொவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அதே நேரத்தில் கல்வியின் தரத்தையும் பராமரிப்பது அவசியம் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தல் மற்றும் மெய்நிகர் ஆய்வக படிப்புகளை வழங்குதல் ஆகியவை குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்தக் கல்வி நிறுவனங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கொவிட் பாதிப்புகளின் நிலவரம் மற்றும் அதன் மூலம் உருவான சூழ்நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கொவிட் நிலைமையை எதிர்கொள்வதற்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்நிறுவனங்கள் எடுத்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

குறைந்த விலை ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கருவிகள், உபகரணங்கள், சுவாசக் கருவிகள், கொவிட் நிலவரத்தை கணிக்கும் கணித அமைப்பு உள்ளிட்டவற்றை உருவாக்கியதற்காகவும், அவற்றை மாநில சுகாதார துறைகளின் பயன்பாட்டிற்கு கிடைக்க செய்ததற்காகவும் உயர்கல்வி நிறுவனங்களை மத்திய கல்வி அமைச்சர் பாராட்டினார்.

தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பொருத்தவரை, புதிய துறைகள் மற்றும் புதிய பல்முனை திட்டங்களை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

*****************


(Release ID: 1720361) Visitor Counter : 236