பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 மேலாண்மை குறித்து மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 18 MAY 2021 3:58PM by PIB Chennai

நண்பர்களே, இரண்டாவது அலை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் அனைவரும் தொடர்ந்து மிகவும் கடினமாக உழைத்து வருகிறீர்கள். உங்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும், உங்கள் மாவட்டங்களில் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றீர்கள். இது மாவட்டங்களில் உள்ள மற்றவர்களுக்கு ஊக்கத்தை அளித்து வருகிறது. அவர்கள் உங்களிடமிருந்து அந்த ஊக்கத்தைப் பெற்றுள்ளனர். பலரால் பல நாட்களாக, அவர்களது வீடுகளுக்குச் சென்று தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க இயலாத சூழல் உள்ளது. பலர் தங்களது குடும்பத்தில் முக்கிய உறுப்பினர்களையும், நெருக்கமானவர்களையும் இழந்துள்ளனர். இந்தக் கடினமான சூழலில், உங்களது கடமைக்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறீர்கள். நமது தோழர்கள் பலரது அனுபவங்களை கேட்கும் வாய்ப்பை நான் சற்று முன்பு பெற்றேன்.

என் முன்னால் ஏராளமானோரை நான் பார்க்கிறேன். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு பலருக்கு கிட்டுவதில்லை. ஆனால், ஒவ்வொருவருக்கும் புதிய வழிமுறைகள் கிடைத்துள்ளன. அதன் மூலம்,  எவ்வாறு வெற்றி அடைவது என்ற முயற்சிகளை மேற்கொள்வதற்கான அடிப்படை விஷயங்கள் கிடைத்துள்ளன. தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்கு, வேறு முக்கியமான விஷயங்கள்  பகிர்ந்து கொள்வதற்காக இருக்க முடியும். நீங்கள் சிறப்பாக செய்ய உத்தேசித்துள்ளவற்றை எந்தவிதத் தயக்கமும் இன்றி, எனக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். உங்களது அனுபவங்களும், முயற்சிகளும் நாடு முழுமைக்கும் பயன்படக்கூடும் என்பதால், நானும் அவற்றைப் பரிசீலிக்க முடியும். இன்று நீங்கள் தெரிவித்துள்ள எண்ணங்கள், கருத்துக்கள் அனைத்தும் நாட்டுக்கு பெரும் பயன் விளைவிப்பதாகும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். எனவே, உங்களது ஆலோசனைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். உங்களது ஒவ்வொரு முயற்சியையும்  நான்  பாராட்டுகிறேன்.

நண்பர்களே, நாட்டின்  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான சவால்கள் உள்ளன. அவை வித்தியாசமான, தன்னித்துவமான சவால்களாக இருப்பதை நீங்கள் காணுகிறீர்கள். உங்கள் மாவட்டத்தின் சவால்களை, நீங்கள் நன்கு புரிந்து கொள்கிறீர்கள். ஆகையால், உங்கள் மாவட்டம் வெற்றி பெறும்போது, நாடும் வெற்றியடைகிறது.

உங்கள் மாவட்டம் கொரோனாவை வீழ்த்தும் போது, நாடும் கொரோனாவை வீழ்த்துகிறது. கொவிட் தொற்று ஏற்பட்ட போதிலும், விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய அதிகாரிகளும், முன்களப் பணியாளர்களும், சுகாதாரப் பணியாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஒவ்வொரு கிராமத்தையும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து கிராம மக்களுக்கும் இருக்க வேண்டும். இத்தகைய உணர்வுடன் மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிராமங்களில் மக்கள் செய்திருந்த ஏற்பாடுகள் பற்றி அறிந்து நான் வியப்படைந்தேன். வேளாண் துறைக்கு ஊரடங்கு இல்லாத போதிலும், சமூக இடைவெளியைப் பின்பற்றி, வேளாண் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். கிராம மக்கள் இந்தப் பிரச்சினையை முக்கியமாகக் கருதி, அதற்கு ஏற்றவாறு தங்கள் தேவைகளை மாற்றிக் கொண்டனர். இதுதான் கிராமங்களின் ஆற்றலாகும். இப்போதும் கூட பல கிராமங்கள் இந்தப் பிரச்சினையை நன்றாகக் கையாளுகின்றன. ஓரிருவர் மட்டும் அத்தியவாசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்று அப்பொருட்களை வாங்கி வந்து மற்றவர்களுக்கும் விநியோகித்து வந்தனர். வெளியூரில் இருந்து விருந்தினர்கள் வந்தால், அவர்கள் சிறிது நேரம் வெளியிலேயே நிறுத்தப்பட்டு பின்னரே வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதுண்டு.

கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்றி வருகிறீர்கள். நீங்கள் இந்தப் போரில், களத்தில் தளபதியாக உள்ளீர்கள். எந்தப் போரிலும், தளபதிகள்தான் கள நிலவரத்தை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு உத்திகளை வகுப்பார்கள். இன்று நீங்கள் அனைவரும் அத்தகைய களத் தளபதிகளாக நிலைமையை சிறப்பாக கையாண்டு வருகிறீர்கள். இந்தத் தொற்றுக்கு எதிராக நம்மிடம் எத்தகைய ஆயுதங்கள் உள்ளன?

உள்ளூர் கட்டுப்பாட்டு மண்டலங்கள், தீவிரமான பரிசோதனைகள், ஆகியவையே மக்களுக்கு சரியான விவரங்களை அளிக்கும் ஆயுதங்களாக உள்ளன. எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் உள்ளன என்ற தகவல்கள் மக்களுக்கு மிகப் பெரும் பயனை அளிக்கின்றன. இதேபோல, பதுக்கல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தலைமை அதிகாரிகளான உங்களது முயற்சியால், முன்களப் பணியாளர்களின் ஊக்கம் அதிகரித்து, அது உங்கள் மாவட்டத்தின் முன்னேற்றத்தில் பிரதிபலிக்கிறது.

உங்களது நடவடிக்கைகளால் முன்களப் பணியாளர்கள் ஊக்கமும் ஆக்கமும் பெற்று உழைக்கிறார்கள். அரசின் கொள்கையில் உங்களது பகுதிக்கு மாற்றம் வேண்டுமென நீங்கள் விரும்பினால், அது அந்தக் கொள்கைக்கு மேலும் வலு சேர்க்கும். உங்களது புதுமையான முயற்சிகள், உங்களது மாநிலத்துக்கு, அல்லது நாட்டுக்கு பயனளிக்கும் என்றால், அதை எங்களுக்கு தெரிவியுங்கள். அதை எவ்வித தயக்கமும் இன்றி தெரிவிக்கவும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றை முறியடிக்க வேண்டும் என்பதால், புதிய சிந்தனைகள், எண்ணங்கள் கொள்கைகளை சிறப்பாக வகுக்க பெரிதும் உதவும்.

நண்பர்களே, உங்களது மாவட்டத்தின் வெற்றி மற்ற மாவட்டங்களுக்கு உதாரணமாக திகழக்கூடும். கொரோனாவைச் சமாளிக்க என்னென்ன நடைமுறைகள் உண்டோ அவையனைத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

நண்பர்களே,

இந்த நேரத்தில், சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதே போல், பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. ஆகையால், தொற்று குறைந்து வரும் வேளையில், அதிகம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்பதால், கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் எளிதில் கிடைக்கச் செய்வதை அதிகாரிகளாகிய நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை எளிதாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

 

நண்பர்களே, நோய் பாதிப்பின் தீவிரம், மருத்துவமனையில் சேர்த்தல், உயிரிழப்பு ஆகியவற்றை குறைப்பதில் தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மிகப் பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசி முறையை சுகாதாரத்துறை அமைச்சகம் ஒழுங்குபடுத்தி வருகிறது.

 

மாநிலங்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கான அட்டவணையை முன்கூட்டியே வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க வேண்டியது  மிகவும் அவசியமாகும். படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் நிலவரம் குறித்த தகவல் எளிதாகக் கிடைக்கும் போது, அது மக்களின் சவுகரியத்தை அதிகரிக்கிறது.

அதேபோல், கள்ளச்சந்தை விற்பனையும் தடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு முன்களப் பணியாளர்களை அணிதிரட்ட வேண்டும்.

நண்பர்களே, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல மருத்துவமனைகளில் இந்த ஆலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. எனவே, இந்த ஆக்சிஜன் ஆலைகள் எங்கெல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் இவற்றை அமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் கண்காணிப்பு குழுக்கள் சிறப்பாக செயல்படுவதைப் பொறுத்தே, ஆக்சிஜன் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும்.

நண்பர்களே, உங்களது நிர்வாகத் திறன், மனித வள மேம்பாடு ஆகியவை இந்தச் சோதனையான நேரத்தில் மிக முக்கிய பங்கை வகிக்கும். உங்கள் மாவட்டத்தில் மருத்துவப் பொருட்கள் விநியோகத்தைத் தவிர, இதர அத்தியவசியப் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதும் அவசியமாகும். இனி வருவது மழைக்காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களது அன்றாட அரசுப் பணிகளில் செலுத்தும் கவனம் ஜூன் மாதம் நெருங்குவதால் சிதற நேரிடும். உங்களது கவனம் வானிலை மற்றும் மழை குறித்து மாறக்கூடும். மழைக்காலம் தொடங்கவுள்ளது. எனவே, மழைக்கால சவால்கள் குறித்து உங்கள் கவனம் செல்வது இயல்புதான். எனவே, தேவையான முன்னேற்பாடுகளை மிக விரைவாகச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

கனமழையால் மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். மின்பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் பெரும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, இவையனைத்தையும், முன்கூட்டியே எதிர்பார்த்து அதற்கு ஏற்ற வகையில் மாற்று ஏற்படுகளை செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த போது, இதில் முதலமைச்சர்களை ஈடுபடுத்த வேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் அவர்களுக்கு இதரப் பணிகள் இருக்குமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும், இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, முதலமைச்சர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதாகும். அனைத்து மாண்புமிகு முதலமைச்சர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது மாநில முதலமைச்சர்களின் வழிகாட்டுதலுடன், உங்கள் மாவட்டத்தில் கிராமங்களை கொரோனாவிலிருந்து விடுவிக்க நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்றிலிருந்து மீளும் விகிதம் அதிகரிக்கும் போது, தொற்று பரவலும் குறையும். உங்களிடம் நம்பிக்கை உள்ளதை என்னால் உணரமுடிகிறது.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களிடம் அரும்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான களமும் உள்ளது. நீங்கள் உங்கள் நலனையும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். உங்களது உன்னதமான தலைமைப் பண்பு உங்கள் பகுதியில் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது

******************



(Release ID: 1720236) Visitor Counter : 162