பாதுகாப்பு அமைச்சகம்

டிஆர்டிஓ உருவாக்கிய கொவிட் தடுப்பு (2 டிஜி) மருந்தின் முதல் தொகுப்பை வெளியிட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 17 MAY 2021 2:44PM by PIB Chennai

கொவிட் துணை சிகிச்சைக்கு, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) உருவாக்கிய கொவிட் எதிர்ப்பு மருந்து 2-டியாக்சி-டி-குளுகோஸ்(2-டிஜி) மருந்தின் முதல் தொகுப்பை  பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தில்லியில் இன்று வெளியிட்டு, அவற்றை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனிடம் ஒப்படைத்தார்.

இந்த மருந்தின் ஒவ்வொரு பெட்டியும், எய்ம்ஸ் இயக்குனர், டாக்டர் ரன்தீப் குலேரியா, மற்றும் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் சுனில் காந்த் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு, நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த கொவிட் தடுப்பு மருந்தான 2-டிஜி மருந்தை, டிஆர்டிஓ-வின் பரிசோதனைக் கூடமான இன்மாஸ், ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் (டிஆர்எல்) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், கொவிட் நோயாளிகளுக்கு உதவும் இந்த மருந்தை தயாரித்த டிஆர்டிஓ மற்றும் டிஆர்எல் நிறுவனத்தை பாராட்டினார். இதன் மூலம் கொவிட் நோயாளிகள் ஆக்ஸிஜனை சார்ந்திருப்பது குறையும் மற்றும் விரைவில் குணமடைய முடியும் என அவர் கூறினார். இந்த மருந்து நாட்டின் விஞ்ஞான வலிமைக்கும், தற்சார்பு முயற்சி இலக்குக்கும் சிறந்த உதாரணம் என திரு ராஜ்நாத் சிங் கூறினார்.  

‘‘இந்த சவாலான நேரத்தில் 2-டிஜி மருந்து புதிய நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது’’ என கூறிய திரு. ராஜ்நாத் சிங், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வெல்வதில், இந்த மருந்து முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

இந்த சவாலான நேரத்தில், நாட்டுக்கு உதவ, பொதுத்துறை நிறுவனமும், தனியார் நிறுவனமும் இணைந்து செயல்பட்டது ஒர் மிகச்சிறந்த உதாரணம் என அவர் கூறினார். நிலைமை சீரடையும்போது, இந்த மருந்து தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானிகளை தாம் கவுரவிக்க போவதாகவும் திரு. ராஜ்நாத் சிங் கூறினார்.

நாட்டின் கொவிட் சூழலை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பதாகவும், ஆக்ஸிஜன் விநியோகத்தை நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளதாகவும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பிரதமர் நல நிதியின் கீழ், பல மருத்துவமனைகளில் டிஆர்டிஓ ஆக்ஸிஜன் ஆலைகளை அமைத்ததை பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டினார். தற்போதைய சூழலில், உள்ளூர் நிர்வாகத்துக்கு பாதுகாப்பு படைகள் உதவி வருவதை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக் காட்டினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், ‘‘2-டிஜி மருந்தை உருவாக்கியது முக்கியமான முன்னேற்றம் என்றும், இந்த மருந்து இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் கொரோனாவை முறியடிக்க பயன்படும்’’ என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719304

*****************



(Release ID: 1719356) Visitor Counter : 285