பாதுகாப்பு அமைச்சகம்
கொவிட்-19 மருத்துவ பொருட்களை கொண்டு வருவதில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் அயராத சேவைகள்
Posted On:
12 MAY 2021 2:57PM by PIB Chennai
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய கொவிட் பிரச்சனையை சமாளிக்க, உள்ளூர் நிர்வாகத்துக்கு ஆக்ஸிஜன் மற்றும் இதர மருத்துவ பொருட்களை வழங்குவதில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றுகின்றன. மே 12ம் தேதி காலை வரை, இந்திய விமானப்படை சரக்கு விமானங்கள், நாட்டின் பல பகுதிகளுக்கு, 634 பயணங்கள் மூலம், 6,856 மெட்ரிக் டன் அளவுக்கு, 403 ஆக்ஸிஜன் கன்டெய்னர்கள், 163 மெட்ரிக் டன் அளவுக்கு இதர சாதனங்கள் ஆகியவற்றை கொண்டு சென்றுள்ளன.
ஜாம்நகர், போபால், சண்டிகர், பனாகர், இந்தூர், ராஞ்சி, ஆக்ரா, ஜோத்பூர், பெகும்பேட், புவனேஸ்வர், புனே, சூரத், ராய்ப்பூர், உதய்பூர், மும்பை, லக்னோ, நாக்பூர், குவாலியர், விஜயவாடா, பரோடா, திமாபூர் மற்றும் ஹிண்டன் ஆகிய நகரங்களுக்கு விமானப்படை சரக்கு விமானங்கள் மருத்துவ சாதனங்களை கொண்டு சென்றுள்ளன.
விமானப்படை சரக்கு விமானங்கள், பல நாடுகளுக்கு 98 பயணங்களை மேற்கொண்டு, 793 மெட்ரிக் டன் அளவுக்கு, 95 கண்டெய்னர்களையும், 204 மெட்ரிக் டன் அளவுக்கு இதர மருத்துவ சாதனங்களையும் கொண்டு வந்துள்ளன. இந்த சாதனங்கள் எல்லாம் சிங்கப்பூர், துபாய், தாய்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, நெதர்லாந்து, மற்றும் இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டன.
‘சமுத்திர சேது -2’’ திட்டத்தின் ஒரு பகுதியாக 7 கடற்படை கப்பல்கள், பல நாடுகளில் இருந்து 13 கன்டெய்னர்களில், 260 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன், 160 மெட்ரிக் டன் அளவுக்கு 8 ஆக்ஸிஜன் கன்டெய்னர்களை தாய் நாடு கொண்டு வந்துள்ளன. மேலும், வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட 2,600 சிலிண்டர்களையும், 3,150 காலி சிலிண்டர்களையும் கொண்டு வந்துள்ளன. மேலும் மருத்துவ பொருட்களை கொண்டு வர ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க்கப்பல் தற்போது புருனே நாட்டில் உள்ளது. ஐஎன்எஸ் சர்துல் போர்கப்பல் இன்று குவைத் வருகிறது.
ஏற்கனவே பல போர்க் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்து, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உள்பட மருத்துவ பொருட்களை கொண்டு வந்துள்ளன. அவற்றின் விவரத்தை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx? PRID=1717924
----
(Release ID: 1718012)
Visitor Counter : 216