பாதுகாப்பு அமைச்சகம்
பிராணவாயு மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு வருவதில் இந்திய விமானப்படையும், கப்பற்படையும் தீவிரம்
Posted On:
07 MAY 2021 4:09PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றின் நெருக்கடியான தருணத்தில் பொது நிர்வாகத்திற்கு உதவும் வகையில் பிராணவாயுக் கொள்கலன்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப்படையும் இந்தியக் கடற்படையும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மே 7-ஆம் தேதி வரை இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் 4,904 மெட்ரிக் டன் பிராணவாயு 252 டேங்கர்களில் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஜாம்நகர், போபால், சண்டிகர், பனாகர், இந்தூர், ராஞ்சி, ஆக்ரா, ஜோத்பூர், பேகம்பட், புவனேஸ்வர், புனே, சூரத், ராய்பூர், மும்பை, லக்னோ, நாக்பூர், குவாலியர், விஜயவாடா, பரோடா, திமாப்பூர் மற்றும் ஹிந்தன் ஆகிய நகரங்கள் இதில் அடங்கும்.
72 கொள்கலன்களில் 1233 மெட்ரிக் டன் கிரையோஜெனிக் பிராணவாயுவையும், 1252 காலி பிராணவாயு சிலிண்டர்களையும் பல்வேறு நாடுகளிலிருந்து இந்திய விமானப்படை பெற்று வந்துள்ளது. சிங்கப்பூர், துபாய், பாங்காக், இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கொள்கலன்களும், சிலிண்டர்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சி-17 மற்றும் ஐஎல்-76 ரக விமானங்களில் கிரையோஜெனிக் பிராணவாயுக் கொள்கலன்கள், பிராணவாயு உற்பத்திக் கருவிகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள், இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்படவுள்ளன.
இந்தியக் கடற்படையின் தல்வார், கொல்கத்தா, ஐராவதம், கொச்சி, தாபார், த்ரிகண்ட், ஜலஷ்வா, ஷர்துல் ஆகிய கப்பல்கள் நட்பு நாடுகளிலிருந்து பிராணவாயுக் கொள்கலன்கள்/ சிலிண்டர்கள்/ செறிவூட்டிகள் மற்றும் இதர உபகரணங்களைக் கொண்டு வருகின்றன.
ஐ.என்.எஸ் தல்வார் கப்பலில் 27 மெட்ரிக் டன் பிராணவாயு, 2 கொள்கலன்களில் பஹ்ரைன் நாட்டிலிருந்து கடந்த திங்கட்கிழமையன்று நியூ மங்களூர் வந்தடைந்தது. பிராணவாயு சிலிண்டர்கள், செறிவூட்டிகள், கொள்கலன்களுடன் குவைத், தோஹா, கத்தார், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து கூடுதலாக பல கப்பல்கள் வரும் நாட்களில் இந்தியா வந்தடைய உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716805
*****************
(Release ID: 1716861)
Visitor Counter : 247