வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கொரோனா தடுப்பூசிக்கு வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் (டிரிப்ஸ்) தள்ளுபடிக்கு அமெரிக்கா ஆதரவு : இந்தியா வரவேற்பு

Posted On: 06 MAY 2021 7:07PM by PIB Chennai

வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் (டிரிப்ஸ்) தள்ளுபடிக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.

உலகளாவிய சுகாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் விரைவாகவும், மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்ய  டிரிப்ஸ் ஒப்பந்த விதிமுறைகளில் தளர்வு தேவை என உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி கூறின.  இந்தியா மற்றும் இதே போன்ற இதர நாடுகளின் செயல்திறன் மிக்க செயல்பாடு காரணமாக, இந்த திட்டத்துக்கு 120க்கும்  மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த மாதம் 26ம் தேதி தொலைபேசியில் பேசும்போது, மனித குலத்தின் நலனுக்காக உலக வர்த்தக அமைப்பில், இந்தியா எடுத்த டிரிப்ஸ் ஒப்பந்த விதிமுறை தளர்வு முயற்சியை தெரிவித்தார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்க அரசும் மே 5ம் தேதி அறிக்கை வெளியிட்டது.

இதை  வரவேற்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

ஒருமனதான அணுகுமுறை அடிப்படையில் உலக வர்த்தக அமைப்பில் டிரிப்ஸ் தள்ளுபடிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறைந்த செலவில் கொவிட் 19 தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருந்து தயாரிப்புகள் உற்பத்தியை விரைவாக அதிகரிப்பதிலும், சரியான நேரத்தில் கிடைக்கச் செய்வதிலும், இந்த வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் தள்ளுபடி ஒரு முக்கியமான நடவடிக்கையாக உள்ளது.

*****************



(Release ID: 1716647) Visitor Counter : 189