எஃகுத்துறை அமைச்சகம்

திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகிப்பதில் எஃகுத் துறை நிறுவனங்கள் தீவிரம்

Posted On: 25 APR 2021 3:35PM by PIB Chennai

மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களும், இந்தத் துறையில் உள்ள தனியார் நிறுவனங்களும் சவால் மிக்க இந்தத் தருணத்தில் திரவ மருத்துவ பிராணவாயு, அரசுக்குக் கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

எஃகு ஆலைகளில் ஒரு நாளின் மொத்த பிராணவாயு உற்பத்தித் திறன் 2834 மெட்ரிக் டன்னாகும். எஃகுத் துறையில் இயங்கும் 33 பிராணவாயு ஆலைகளில் (மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் சேர்த்து) 29 ஆலைகள் முறையாக பயன்படுத்தப் படுகின்றன. தினமும் 2834 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எஃகுத் துறையில், 2021 ஏப்ரல் 24-ஆம் தேதி, 3474 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு உற்பத்தி செய்யப்பட்டது.

இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக கடந்த வாரம் நாளொன்றுக்கு 1500/1700 டன் வழங்கப்பட்டதற்கு மாற்றாக ஏப்ரல் 24-ஆம் தேதி பொதுத்துறை மற்றும் தனியார் எஃகு நிறுவனங்களால் பல்வேறு மாநிலங்களுக்கு 2894 டன் பிராணவாயு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திரவ பிராணவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவற்றை விநியோகம் செய்வதற்காக பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.

எஃகு ஆலைகள், பிராணவாயு சிலிண்டர்களை நிரப்பி அவற்றை மாநிலங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் வழங்கி வருகின்றன.

ஆர்ஐஎன்எல் நிறுவனம், கடந்த நிதியாண்டு 2020-21-இல் 8842 டன் மருத்துவ பிராணவாயுவை விநியோகம் செய்தது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் இன்று காலை வரை 1300 டன்னுக்கும் அதிகமான மருத்துவ பிராணவாயு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் பிராணவாயுவின் விநியோகம் 100 முதல் 140 டன் வரை அதிகரித்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்ஐஎன்எல் எஃகு ஆலையிலிருந்து 100 டன் திரவ மருத்துவ பிராணவாயுவுடன் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மஹாராஷ்டிராவிற்குப் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1713956

------


(Release ID: 1713975) Visitor Counter : 246