நிதி அமைச்சகம்
ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களின் விநியோகத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார செஸ் வரி தள்ளுபடி
கொவிட் தொடர்பான தடுப்பு மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு
இந்த நடவடிக்கைகளின் மூலம் இப்பொருட்கள் எளிதாக கிடைப்பதோடு இவற்றின் விலையும் குறையும்
Posted On:
24 APR 2021 2:40PM by PIB Chennai
நாட்டில் ஆக்சிஜனின் இருப்பை மேம்படுத்துவதற்கான ஆய்வு கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மருத்துவ ஆக்சிஜன், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் பராமரிப்புக்கு தேவைப்படும் உபகரணங்களின் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான உடனடி தேவை குறித்து பிரதமர் வலியுறுத்தினார்
அனைத்து அமைச்சகங்களும். துறைகளும் ஒன்றிணைந்து பணிபுரிந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களின் இருப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ரெம்டிசிவிர் மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான அடிப்படை சுங்க வரி சமீபத்தில் விலக்கப்பட்டதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு தேவைப்படும் உபகரணங்களின் இறக்குமதியை துரிதப்படுத்துமாறும் கூட்டத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அவற்றின் உற்பத்தி மற்றும் இருப்பை அதிகப்படுத்துவதற்கும், அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், அடிப்படை சுங்க வரி மற்றும் இறக்குமதி மீதான சுகாதார செஸ் வரி ஆகியவற்றில் இருந்து கீழ்கண்ட ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களுக்கு மூன்று மாதங்களுக்கு உடனடி விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது
1. மருத்துவ நிலை ஆக்சிஜன்
2. ஆக்சிஜன் செறிவூக்கி (உபகரணங்களுடன்)
3. வி பி எஸ் ஏ மற்றும் பி எஸ் ஏ ஆக்சிஜன் ஆலைகள், கிரையோஜனிக் ஆக்சிஜன் பிரித்தெடுக்கும் வசதிகள்
4. ஆக்சிஜன் கலன்கள்
5. ஆக்சிஜன் நிரப்பும் உபகரணங்கள்
6. ஆக்சிஜன் சேமிப்புத் தொட்டிகள் மற்றும் ஆக்சிஜன் உருளைகள்
7. ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்
8. ஆக்சிஜன் போக்குவரத்திற்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற கொள்கலன்கள்
9. ஆக்சிஜனுக்கான கிரையோஜனிக் சாலை போக்குவரத்து தொட்டிகள்
10. ஆக்சிஜன் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து ஆகியவற்றுக்காக தேவைப்படும் மேற்கண்டவற்றின் உபகரணங்கள்
11. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய பயன்படும் வேறு ஏதேனும் உபகரணம்
12. சுவாசக் கருவிகள், காற்றழுத்த உபகரணங்கள்
13. சுவாச சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்கள்
14. சுவாசக் கருவிகளுக்கு தேவைப்படும் தலைக்கவசங்கள்
15. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சுவாச கருவிகளுக்கு தேவைப்படும் ஓரசனால் முகக் கவசங்கள்
16. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சுவாச கருவிகளுக்கு தேவைப்படும் நாசி முகக் கவசங்கள்
இந்த நடவடிக்கைகளின் மூலம் இப்பொருட்கள் எளிதாக கிடைப்பதோடு இவற்றின் விலையும் குறையும். இந்த உபகரணங்களின் எளிதான மற்றும் விரைவான சுங்க ஒப்புதல்களை உறுதி செய்யுமாறு வருவாய் துறைக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட பொருட்களுக்கான சுங்க ஒப்புதல் தொடர்பான விஷயங்களுக்கு சுங்கத் துறை இணைச் செயலாளர் திரு கௌரவ் மசல்டானை தொடர்பு அதிகாரியாக வருவாய்துறை நியமித்தது.
மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக கடந்த சில நாட்களில் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. சிங்கப்பூரிலிருந்து கிரையோஜனிக் ஆக்சிஜன் டாங்குகளை இந்திய விமானப்படை விமானங்கள் கொண்டு வருகின்றன. பயண நேரத்தை குறைப்பதற்காக நாட்டுக்குள்ளும் ஆக்சிஜன் போக்குவரத்தை இந்திய விமானப்படை கையாள்கிறது.
இதற்கிடையே, மே மற்றும் ஜூன் மாதங்களில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் முக்கிய முடிவும் நேற்று எடுக்கப்பட்டது.
நிதியமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர், சுகாதார அமைச்சர், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர், டாக்டர் குலேரியா மற்றும் வருவாய், சுகாதாரம் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
-------
(Release ID: 1713788)
Visitor Counter : 297