பாதுகாப்பு அமைச்சகம்

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு முடிவு

Posted On: 23 APR 2021 5:00PM by PIB Chennai

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் கன்டெய்னர்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு (AFMS) முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொவிட் 2வது அலையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான 23, ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு கருவியும், நிமிடத்துக்கு 40 லிட்டர், ஒரு மணிக்கு 2,400 லிட்டர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இவற்றின் மூலம் 20 முதல் 25 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இதை எளிதாக பிற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த ஆக்ஸிஜன் கருவிகள் ஒரு வாரத்துக்குள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது அதிகரித்துள்ள மருத்துவ தேவையை சமாளிக்க, ராணுவ மருத்துவமனைகளில் குறைந்த கால பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு, 2021 டிசம்பர் 31ம் தேதி வரை பணிக்கால நீட்டிப்பை வழங்க பாதுகாப்புத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளதுஇதன் மூலம் 238 மருத்துவர்களுடன் ராணுவ மருத்துவ சேவைகளின் பலம் அதிகரிக்கும்.

-------


(Release ID: 1713586) Visitor Counter : 256