சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

அனைத்து யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலவரம் குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு

Posted On: 20 APR 2021 3:33PM by PIB Chennai

கொவிட் நிலவரம், மேலாண்மை, உத்திகள் குறித்து அனைத்து யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய் குமார் பல்லா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷனுடன் இணைந்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

காணொலி  மூலம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர்  டாக்டர் பலராம் பர்கவா மற்றும் யூனியன் பிரதேசங்களின் டிஜபிக்கள் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதை  மத்திய உள்துறைச் செயலாளர் சுட்டிக் காட்டினார். கடந்த ஜனவரி முதல் தேதி அன்று 20,000-ஆக இருந்த கொவிட் பாதிப்பு தற்போது 10 மடங்குக்கு மேல்  அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் புதிய பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது. 

அனைத்து யூனியன் பிரதேசங்களில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, வார அளவிலான பரிசோதனைகள், பாதிப்பு வீதம், புதிய பாதிப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.

 

கட்டுப்படுத்துதல் நடவடிக்கை குறித்தும், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மேலாண்மைக்கு மேற்கொள்ளும் முயற்சிகளையும் யூனியன் பிரதேசங்கள் பகிர்ந்து கொண்டன. தங்கள் பிரதேசங்களுக்கு வரும் பயணிகளால் கொவிட் பாதிப்பு அதிகரிப்பதாக லடாக், ஜம்மு காஷ்மீர் மற்றும் லட்சத்தீவு ஆகியவை சுட்டிக் காட்டின.

கொவிட் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இவற்றை சமாளிக்க, டிஆர்டிஓ சமீபத்தில் செயல்படுத்திய கொவிட் மருத்துவமனையைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைகளின் படுக்கைகளை அதிகரிக்க கடந்தாண்டும், இந்தாண்டும் மத்திய அரசு சரியான நேரத்தில் உதவியதற்கு தில்லி அரசு நன்றி தெரிவித்தது.

விரிவான  ஆலோசனைக்குப்பின், யூனியன் பிரதேசங்களில் தீவிர கண்காணிப்பு, கொவிட் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை பின்பற்றும்படி மத்திய உள்துறை செயலாளர் வலியுறுத்தினார்.  பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்டி-பிசிஆர்  மற்றும் விரைவு பரிசோதனையை அதிகரிக்கும்படியும் அவர் ஆலோசனை வழங்கினார். 

தற்போதைய கொவிட் சூழல் குறித்து கவலை தெரிவித்த டாக்டர் வி.கே.பால், கொவிட் நடவடிக்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என குறிப்பிட்டார். யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள்,  மூன்று வாரங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு மற்றும் கொவிட் மேலாண்மை நடவடிக்கைகளில், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும் என மத்திய உள்துறை செயலாளர் உறுதி அளித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712853

*****************



(Release ID: 1712981) Visitor Counter : 190