சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது தொடர்பான பீதியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: போதிய அளவில் இருப்பு உள்ளது
Posted On:
15 APR 2021 9:54AM by PIB Chennai
மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது தொடர்பான பீதியைக் குறைக்க, மத்தியக் குழு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவ ஆக்ஸிஜன் முக்கியமானதாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட் தொற்று சமயத்தில், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய தொழில்துறை வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகபத்ரா தலைமையில், மூத்த அதிகாரிகள் அடங்கிய அமைச்சகங்களுக்கு இடையேயான, அதிகாரம் பெற்ற குழு-2 அமைக்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக, இந்தக் குழு மருத்துவ ஆக்ஸிஜன் சீராக கிடைப்பதை, தொடர்ந்து கண்காணித்து வந்தது. தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ள சூழ்நிலையில், இந்தக் குழு மீண்டும் கூடி, பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு போதிய அளவில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தக் குழு, மாநிலங்கள், ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் மற்றும் இதன் விநியோகத்தில் தொடர்புடையவர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறது.
நாட்டில் ஆக்ஸிஜனின் தினசரி உற்பத்தி 7127 மெட்ரிக் டன்னாக உள்ளது. இது தவிர எஃகு ஆலைகளில் கிடைக்கும் கூடுதல் ஆக்ஸிஜன் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் விநியோகம் அதிகரித்துள்ளதால், மத்தியக்குழு ஆணையின் படி கடந்த இரண்டு நாட்களாக ஆக்ஸிஜன் மொத்த உற்பத்தி 100 சதவீதமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி அன்று, நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜனின் நுகர்வு 3842 மெட்ரிக் டன். இது தினசரி மொத்த உற்பத்தியில், 54 சதவீதம் மட்டுமே. மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஆகிய மாநிலங்களில் ஆக்ஸிஜன் நுகர்வு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சட்டீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகமாக உள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளில், தற்போது இருப்பு 50,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக உள்ளது. அதோடு ஆக்ஸிஜன் ஆலைகளில் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தற்போது ஆக்ஸிஜன் இருப்பு, போதிய அளவில் உள்ளது. ஆக்ஸிஜன் விநியோகம் தடையின்றி கிடைக்க, கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் சீராக கிடைப்பதை உறுதி செய்ய மத்தியக் குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எஃகு ஆலைகளில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு கடந்த சில நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை எஃகு ஆலைகளில் இருந்து மட்டும் 14,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வருகிறது.
ஆக்ஸிஜன் தேவைப்படும் மாநிலங்கள், ஆக்ஸிஜன் கிடைக்கும் இடங்கள் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் மருத்துவ ஆக்ஸிஜன், மாநிலங்களின் எல்லைகளை தாண்டி தடைகள் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிரா டோல்வியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ எஃகு ஆலை, சட்டீஸ்கர் பிலாய் பகுதிகளில் உள்ள செயில் நிறுவன எஃகு ஆலை, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ஜேஎஸ் டபிள்யூ எஃகு ஆலை ஆகியவைகளிலிருந்து தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் பெற முடிகிறது. இதேபோல், மத்தியப் பிரதேசமும், சட்டீஸ்கரில் உள்ள பிலாய் எஃகு ஆலையிலிருந்து ஆக்ஸிஜன் பெறுகிறது.
மருத்துவ ஆக்ஸிஜனை, மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வது தற்போது சவாலாக உள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் கீழ், ரயில்வே அமைச்சகம், மாநிலங்களின் போக்குவரத்து துறைகளுடன் இணைந்து ஒரு துணைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர்களின் போக்குவரத்தை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போல் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711922
*****
(Release ID: 1711987)
Visitor Counter : 300