பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தப் எழுதிய ஒடிசா இதிகாசத்தின் இந்திப் பதிப்பை பிரதமர் வெளியிட்டார்
'உத்கல் கேசரியின்' சிறப்பான பங்களிப்பை நினைவுக்கூர்ந்தார்
சுதந்திரப் போராட்டத்தில் ஒடிசாவின் பங்கிற்கு புகழாரம்
வரலாறு மக்களுடன் பரிணாமம் கொண்டது, அரச வம்சங்கள் மற்றும் அரண்மனைகளின் கதைகளை வெளிநாட்டு சிந்தனை வரலாறாக மாற்றியது: பிரதமர்
ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வலிமையை ஒடிசாவின் வரலாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறது: பிரதமர்
Posted On:
09 APR 2021 2:02PM by PIB Chennai
'உத்கல் கேசரி' டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தப் எழுதிய 'ஒடிசா இதிகாசத்தின்' இந்தி மொழிப்பெயர்ப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்.
ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் இதுவரை கிடைத்து வந்த இந்த புத்தகம், திரு ஷங்கர் லால் புரோகித்தால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் கட்டாக் மக்களவை உறுப்பினர் திரு பர்த்ருஹரி மாஹ்தப் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
'உத்கல் கேசரி' டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தப்பின் 120-வது பிறந்த நாளை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடு கொண்டாடியதை தம்முடைய உரையில் பிரதமர் நினைவுக் கூர்ந்தார்.
புகழ்பெற்ற 'ஒடிசா இதிகாசத்தின்' இந்திப் பதிப்பை வெளியிட்ட திரு மோடி, ஒடிசாவின் விரிவான மற்றும் சிறப்பான வரலாறு நாட்டு மக்களை சென்றடைய வேண்டியது முக்கியம் என்றார்.
சுதந்திரப் போராட்டத்திற்கு டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தப் ஆற்றிய பங்களிப்பை நினைவுக்கூர்ந்த பிரதமர், சமுதாயத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காகவும் அவர் போராடினார் என்று புகழாரம் சூட்டினார்.
அவசர காலத்தின் போது, எந்தக் கட்சியின் கீழ் அவர் முதலமைச்சர் ஆனாரோ அந்தக் கட்சியையே எதிர்த்து டாக்டர் மஹ்தப் சிறைக்கு சென்றார் என்று திரு மோடி கூறினார்.
இந்திய வரலாற்று கூட்டமைப்பிலும், ஒடிசாவின் வரலாற்றை தேசிய தளத்திற்கு எடுத்துச் சென்றதிலும் டாக்டர் மஹ்தப்பின் முக்கியப் பங்கை பிரதமர் குறிப்பிட்டார்.
அவரது பங்களிப்பின் மூலம் ஒடிசாவில் அருங்காட்சியகம், ஆவணக்காப்பகம் மற்றும் அகழ்வாராய்ச்சி பிரிவுகள் உருவாகின.
வரலாற்றை இன்னும் விரிவாக படிக்க வேண்டிய தேவை குறித்து பிரதமர் வலியுறுத்தினார். வரலாறு என்பது கடந்த காலத்தின் பாடமாக மட்டுமே இல்லாமல் எதிர்காலத்தின் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதை மனதில் வைத்துக் கொண்டு, இந்திய விடுதலையின் 75-வது ஆண்டை கொண்டாடும் போது நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றை போற்றுவதற்கு நாடு கவனம் செலுத்துகிறது.
சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் மற்றும் கதைகள் முறையான வடிவில் நாட்டின் முன்பு வைக்கப்படவில்லை என்று திரு மோடி கவலை தெரிவித்தார். இந்தியப் பாரம்பரியத்தை பொருத்தவரை, வரலாறு என்பது அரசர்கள் மற்றும் அரண்மனைகளை பற்றியது மட்டுமே அல்ல என்றும் அவர் கூறினார்.
பல்லாயிரம் வருடங்களாக மக்களோடு சேர்ந்து வரலாறும் பரிணாம வளர்ச்சிக் கண்டது. ஆனால் வெளிநாட்டு சிந்தனையின் மூலமாக அரச பரம்பரைகள் மற்றும் அரண்மனைகளின் கதைகளே வரலாறாக மாறின.
நாம் அம்மாதிரியான மக்கள் அல்ல என்று கூறிய பிரதமர், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் பெரும்பாலான பகுதிகள் பொதுமக்கள் பற்றியே உள்ளன என்று கூறினார்.
பைக்கா புரட்சி, கன்ஜம் கலகம், சம்பல்பூர் போராட்டம் போன்றவற்றின் மூலம் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒடிசா எப்போதுமே புதிய சக்தியை கொடுத்தது என்று பிரதமர் கூறினார்.
சம்பல்பூர் நிகழ்வில் பங்கேற்ற சுரேந்திர சாய் நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கிறார். பண்டிதர் கோபபந்து, ஆச்சார்யா ஹரிஹர் மற்றும் டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தப் ஆகிய தலைவர்களின் சிறப்பான பங்களிப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். ரமாதேவி, மால்தி தேவி, கோகிலா தேவி மற்றும் ராணி பாக்கியவதியின் பங்களிப்பிற்கு திரு மோடி மரியாதை செலுத்தினார்.
தங்களது நாட்டுப்பற்று மற்றும் வீரத்தின் மூலம் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பழங்குடியினரின் பங்களிப்பையும் பிரதமர் குறிப்பிட்டார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய மிகப்பெரிய பழங்குடியின தலைவரான லட்சுமண் நாயக் அவர்களை பிரதமர் நினைவுக் கூர்ந்தார்.
ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வலிமையை ஒடிசாவின் வரலாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.
வரலாற்றில் பிரதிபலிக்கும் இந்த வலிமையானது தற்போதைய மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகள் உடன் இணைந்து நமக்கான வழிகாட்டியாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர், வர்த்தகம் மற்றும் தொழில்களுக்கான முதல் தேவையாக உள்கட்டமைப்பு உள்ளது என்றார். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கடலோர நெடுஞ்சாலைகள் ஒடிசாவில் கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் இவற்றின் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்பு மேம்படும் என்றும் கூறினார்.
மேலும், கடந்த 6-7 வருடங்களில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு ரயில் தடங்களும் மாநிலத்தில் பதிக்கப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்புக்கு பிறகு தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப் படுகின்றன.
மாநிலத்திலுள்ள எண்ணெய் மற்றும் எஃகு துறையில் இருக்கும் விரிவான சாத்தியக்கூறுகளை அடைவதற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஒடிசாவில் உள்ள மீனவர்களின் வாழ்வை நீல புரட்சியின் மூலம் மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திறன் வளர்த்தல் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் பேசினார். மாநிலத்திலுள்ள இளைஞர்களின் நலனுக்காக ஐஐடி புவனேஷ்வர், ஐஐஎஸ்ஈஆர் பெர்காம்பூர், இந்திய திறன் வளர்த்தல் நிறுவனம் மற்றும் ஐஐடி சம்பல்பூர் ஆகியவற்றுக்கான அடிக்கல் ஒடிசாவில் நாட்டப்பட்டுள்ளன.
ஒடிசாவின் வரலாற்றையும் அதன் பிரமாண்டத்தையும் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சுதந்திரத்தின் அம்ருத் மகோத்சவத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்த அவர், விடுதலைப் போராட்டத்தில் காணப்பட்ட அதே உற்சாகத்தை இந்த பிரச்சாரமும் உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
*****************
(Release ID: 1710674)
Visitor Counter : 227
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam