பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி-யின் 400வது பிறந்த நாளை நினைவு கூறும் உயர்நிலை குழு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

Posted On: 08 APR 2021 2:09PM by PIB Chennai

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி-யின் 400வது பிறந்த நாளை நினைவு கூறும் உயர்நிலை குழு கூட்டத்துக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி-யின் 400வது பிறந்தநாளை நினைவு கூறும் பிரதமரின் பிரம்மாண்ட தொலைநோக்குக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.  மதச் சுதந்திரத்துக்கு ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி-யின்  பல பங்களிப்புகள் மற்றும் தியாகத்தை அவர்கள் நினைவு கூர்ந்தனர். 

இந்த நினைவு விழா, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினா்.  ஸ்ரீ குருதேக் பகதூர் வாழ்க்கையில் பல அம்சங்களையும் சுட்டிக்காட்டுவதின் முக்கியத்துவத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர். 

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் தகவல் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கூட்டு முயற்சிகள் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இந்த நினைவு விழாவுக்காக தற்போது வரை, வரையறுக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து கலாச்சாரத்துறை செயலாளர் விளக்கினார். 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஆலோசனைகளை தெரிவித்ததற்காக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி-யின் 400 வது பிறந்தநாள் விழா, ஒரு ஆன்மீக பாக்கியம் மற்றும் தேசிய கடமை என அவர் கூறினார்.

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களையும், பாடங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் அவரிடம் இருந்து அனைவரும் உத்வேகம் பெறுகிறோம் என்றும் பிரதமர் கூறினார்.  இந்தப் பாடங்களை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

டிஜிட்டல் முறை மூலமாக இந்த தகவலை  உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினரிடம் பரப்புவது எளிது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீக்கிய குரு பாரம்பரியம், ஒரு முழுமையான வாழ்க்கை தத்துவம் என பிரதமர் கூறினார்.  ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி-யின் 550வது பிறந்த நாள் மற்றும் ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 400வது பிறந்த நாள் மற்றும் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் 350வது பிறந்தநாள் ஆகியவற்றை கொண்டாடும் வாய்ப்பை பெற்றது அரசின் பாக்கியம் மற்றும் அதிர்ஷ்டம் என பிரதமர் தெரிவித்தார்.

ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 400வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில் அதிகளவிலான மக்களை இணைக்க வேண்டும் என்றும் இந்த ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும்  இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் கூறினார்.

திரு குரு தேக் பகதூரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை மட்டும் பரப்பாமல், ஒட்டுமொத்த குரு பாரம்பரியம் பற்றி உலகம் முழுவதும் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும் என அவர் கூறினார். உலகம் முழுவதும் சீக்கிய சமுதாயத்தினர் மற்றும் குருத்துவாராக்கள் செய்யும் சமூக சேவையை பாராட்டிய பிரதமர், சீக்கிய பாரம்பரியம் குறித்து முறையான ஆய்வுகளை  மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஸ், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் திரு மல்லிகார்ஜூன கார்கே, ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் திரு அசோக் கெலாட், அமிர்தசரஸில் உள்ள சிரோமணி குருத்துவாரா கமிட்டியின் தலைவர் பீபி ஜகிர் கவுர், எம்.பிக்கள் திரு சுக்பிர் சிங் பாதல், திரு சுக்தேவ் சிங் திண்ட்ஷா, முன்னாள் எம்.பி திரு தர்லோசன் சிங், அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.ஷோதி, பிரபல அறிஞர் திரு அமர்ஜித் சிங் கிரவால் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

*****************


(Release ID: 1710431) Visitor Counter : 229