பிரதமர் அலுவலகம்

தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 26 MAR 2021 9:50PM by PIB Chennai

வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்டார்.

வங்கதேச குடியரசுத் தலைவர் மேன்மைமிகு திரு முகமது அப்துல் ஹமீது, பிரதமர் மேன்மைமிகு ஷேக் ஹசீனா, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இளைய மகளான ஷேக் ரெஹானா, முஜிப் போர்ஷோ கொண்டாட்டத்தின் தேசிய செயலாக்க குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான டாக்டர் கமால் அப்துல் நாசர் சவுத்ரி மற்றும் இதர பிரமுகர்கள் தேஜ்கானில் உள்ள தேசிய அணிவகுப்பு சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வங்கதேசத்தின் தேசிய தந்தை, பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டையும் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

புனித நூல்களான குரான், பகவத்கீதை, திரிபிடகம் மற்றும் பைபிள் ஆகியவற்றின் வாசகங்களோடு நிகழ்ச்சி தொடங்கியது. “என்றும் வாழும் முஜிப்என்ற காணொலியும், வங்கதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவை குறிக்கும் இலச்சினையும் வெளியிடப்பட்டன.

இந்த சிறப்பு நிகழ்வை கொண்டாடும் வகையில் கருத்துப் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. “என்றும் வாழும் முஜிப்என்ற அனிமேஷன் காணொலியும் திரையிடப்பட்டது.

வங்கதேசத்தை கட்டமைத்ததில் பாதுகாப்பு படைகளின் பங்களிப்பை குறிக்கும் வகையில் அந்நாட்டு படைகளின் சிறப்பு விளக்கக்காட்சியும் திரையிடப்பட்டது.

வரவேற்புரை ஆற்றிய டாக்டர் கமால் அப்துல் நாசர் சவுத்ரி, பிரதமர் திரு நரேந்திர மோடி வருகை மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேச சுதந்திர போரில் நேரடியாக பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதை குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டன.

ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு அவரது மறைவுக்கு பிறகு வழங்கப்படும் காந்தி அமைதிப் பரிசு 2020- அவரது இளைய மகளான ஷேக் ரெஹானாவிடம் பிரதமர் மோடி வழங்கினார். ஷேக் ரெஹானாவின் சகோதரியும் பிரதமருமான ஷேக் ஹசீனா உடனிருந்தார்.

அகிம்சை மற்றும் இதர காந்திய முறைகளின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு சிறப்பான பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

தம்முடைய உரையில் அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளின் பல்வேறு பரிணாமங்கள் குறித்து பேசினார்.

அவரது உரையை தொடர்ந்து, ‘என்றும் வாழும் முஜிப் நினைவுப் பரிசைபிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ஷேக் ரெஹானா வழங்கினார்.

இந்திய பிரதமருக்கும் மக்களுக்கும் தம்முடைய உரையின் போது வங்கதேச குடியரசுத் தலைவர் திரு முகமது அப்துல் ஹமீது நன்றி தெரிவித்தார். 1971-ம் ஆண்டு வங்கதேச சுதந்திர போரில் இந்தியாவின் பங்கு மற்றும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும், இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பிரதமர் ஷேக் ஹசீனா மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார். எல்லா காலங்களிலும் வங்கதேசத்திற்கு ஆதரவளிக்கும் இந்தியாவை அவர் பாராட்டினார்.

முறைப்படியான நிகழ்ச்சியை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகரான பண்டிட் அஜோய் சக்ரபர்த்தி பங்கேற்று பங்கபந்துக்காக தாம் இயற்றி அர்ப்பணித்த ராகத்தைக் கொண்டு பார்வையாளர்களை மெய்மறக்க செய்தார்.

ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் இதயங்களை வென்றது. பல்வேறு இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகளோடு கொண்டாட்டங்கள் நிறைவுற்றன.

------


(Release ID: 1708109) Visitor Counter : 197