பிரதமர் அலுவலகம்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேது தொடக்க விழாவில் பிரதமரின் உரை
Posted On:
09 MAR 2021 4:49PM by PIB Chennai
வணக்கம்!
திரிபுரா ஆளுநர் திரு ரமேஷ் பைஸ், முதல்வர் திரு பிப்லாப் தேவ், துணை முதல்வர் திரு ஜிஸ்னு தேவ் பர்மன் மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திரிபுரா சகோதார, சகோதரிகளே! திரிபுராவின் 3 ஆண்டு வளர்ச்சி பயணம் நிறைவடைந்ததற்கு வாழ்த்துக்கள்.
சகோதர, சகோதரிகளே!
3 ஆண்டுகளுக்கு முன்பு, திரிபுரா மக்கள் புதிய வரலாறு படைத்தனர். பல ஆண்டுகாலமாக வளர்ச்சிக்கு தடையாக இருந்த எதிர்மறையான சக்திகளை அகற்றி, புதிய தொடக்கத்தை திரிபுரா தொடங்கியது.
நண்பர்களே,
30 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த முந்தைய அரசுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சி புரியும் ‘இரட்டை எஞ்சின்' அரசுக்கும் உள்ள வேறுபாட்டை திரிபுரா மாநிலம் தெளிவாக உணர்ந்து வருகிறது. முந்தைய ஆண்டுகளில் ஊழல் கலாச்சாரம் நிலவிய இடத்தில் தற்போது பயனாளிகளுக்கான தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக சென்றடைகிறது.
உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காமல் ஊழியர்கள் துயரடைந்தனர். தற்போது 7-வது ஊதிய ஆணையத்தின் படி சம்பளத்தைப் பெறுகின்றனர். விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை விற்பதில் ஏராளமான சவால்களை சந்தித்து வந்த சூழலில், முதல்முறையாக திரிபுராவில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னர் நிலவிய வேலை நிறுத்த கலாச்சாரத்திற்கு மாற்றாக தற்போது எளிதாக வர்த்தகத்தை மேற்கொள்ளும் சூழல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. தொழில் துறைகள் முடங்கி வந்த முந்தைய சூழலை மாற்றி தற்போது புதிய முதலீடுகள் ஏற்பட்டு வருகின்றன. திரிபுராவின் ஏற்றுமதி அளவு ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
நண்பர்களே,
திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த ஆறு வருடங்களில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு பெருமளவு உயர்ந்துள்ளது. 2009-2014-ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக திரிபுரா மாநிலம் ரூ. 3500 கோடியை பெற்ற நிலையில், 2014-19-ஆம் ஆண்டுகளில் இந்த மாநிலத்திற்கு ரூ. 12,000 கோடி வழங்கப்பட்டது.
‘இரட்டை எஞ்சின்' அரசுகள் இல்லாத மாநிலங்களில், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறைவாக இருக்கின்றன. தற்போதுள்ள ‘இரட்டை எஞ்சின்' அரசு, திரிபுராவை வலுப்படுத்துவதற்காக பணியாற்றுகிறது. மின்சார பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து அபரிமிதமான மின்சாரத்தை பெற்றுள்ள மாநிலமாக ‘இரட்டை எஞ்சின்' அரசு திரிபுராவை மாற்றியுள்ளது. 2 லட்சம் ஊரக வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு வசதி, 2.5 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு திரிபுராவின் ஒவ்வொரு கிராமத்தையும் மாற்றியமைத்தது, மாத்ரு வந்தனா திட்டத்தின் மூலம் 50,000 கர்ப்பிணி பெண்கள் பயனடைவது, 40 ஆயிரம் ஏழை குடும்பங்கள் புதிய வீடுகளை பெறுவது போன்ற பல்வேறு மாற்றங்களை ‘இரட்டை எஞ்சின்' அரசு கொண்டுவந்தது.
சகோதர, சகோதரிகளே!
பிரதமரின் வீட்டு வசதி திட்டம் திரிபுராவில் வேகமாக நடக்கிறது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் மூலம் நவீன வீடுகள் கட்டப்படும் 6 மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.
சகோதர, சகோதரிகளே,
கடந்த மூன்று ஆண்டுகளில் இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு, அபரிமிதமான வளர்ச்சியை திரிபுரா சந்தித்துள்ளது. விமான நிலையம், திரிபுராவில் இணையதள வசதியை மேம்படுத்துவதற்கான கடல் இணைப்பு, ரயில் மற்றும் நீர்வழி இணைப்புகள் போன்றவற்றின் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சாலைகள், பாலங்கள், வாகன நிறுத்துமிடங்கள், ஸ்மார்ட் சிட்டி கட்டமைப்புகள் ஆகியவற்றை திரிபுரா இன்று பெற்றுள்ளது.
இந்த இணைப்புகள் திரிபுரா மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி வருவாயை அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
திரிபுராவின் ஒட்டு மொத்த பகுதியும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே வர்த்தக வழித்தடமாக மேம்படுத்தப்படுகிறது. எனது வங்கதேச பயணத்தின் போது, திரிபுராவை, வங்கதேசத்துடன் நேரடியாக இணைக்கும் மைத்ரி (நட்பு) பாலத்துக்கு நானும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் அடிக்கல் நாட்டினோம். அது இன்று தொடங்கப்பட்டுள்ளது. சப்ரூம் மற்றும் ராம்கர் இடையிலான இந்த பாலம் இந்தியா-வங்கதேசம் இடையேயான நட்பு மற்றும் வளத்தை வலுப்படுத்தியுள்ளது. இரு நாடுகள் இடையேயான நில, ரயில் மற்றும் நீர்வழி இணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த பாலம் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது. இது திரிபுரா, அசாம், மிசோரம் போன்ற மாநிலங்களை வங்கதேசத்துடனும் மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் இணைக்கும்.
நண்பர்களே!
ஃபென்னி ஆற்றின் மீது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் உள்ள சர்வதேச கடற்கரை துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ள நகரமாக அகர்தலா மாறும். இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை-08 மற்றும் தேசிய நெடுஞ்சாலை-208-ன் விரிவாக்கத் திட்டங்கள், துறைமுகத்துடன் வடகிழக்கு பகுதிகளுடனான இணைப்பை மேலும் வலுப்படுத்தும்.
நண்பர்களே!
இன்று தொடங்கப்பட்டுள்ள பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், வணிக வளாகம், விமான நிலையத்தை இணைக்கும் விரிவுபடுத்தப்பட்ட சாலை ஆகியவை அகர்தலாவில் சுமூகமான வாழ்க்கை ஏற்படவும், எளிதாக வர்த்தகத்தை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.
ரூ. 600 கோடி மதிப்பிலான தொகுப்புத் திட்டம், மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். பிரதமரின் வன் தன் திட்டத்தின் கீழ் மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் கலைகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்தப் பகுதியின் பழங்குடி மக்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது.
நண்பர்களே!
திரிபுரா அரசு, திரிபுரா மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும். முதல்வர் பிப்லாப் மற்றும் அவரது குழுவினருக்கு நான் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
*****************
(Release ID: 1704198)
Visitor Counter : 219
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam