குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன்களுடன், உணர்வுபூர்வமான மற்றும் சமுதாயத் திறமைகளும் அவசியம்: குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
Posted On:
04 MAR 2021 3:50PM by PIB Chennai
பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களுடன் உணர்வுபூர்வமான மற்றும் சமுதாயத் திறமைகளும் அவசியம் என்றும், இது போன்ற திறமைகள் அதிவிரைவாக மாறிவரும் உலகிற்கு தகுந்தவாறு மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் ஆறாவது நிறுவன தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே இன்று உரையாடிய அவர், சமூக தேவைகளுடன் மாணவர்கள் தங்களது அறிவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பின் முக்கிய அம்சமாக தொழில்நுட்ப மேம்பாடு விளங்குவதாகக் குறிப்பிட்ட திரு நாயுடு, தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதையில் சீராக பயணிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அதேவேளையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி முன்னேறும் அதேவேளையில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
புதிய மீண்டெழும் தன்மையுடைய மற்றும் ஆற்றல் வாய்ந்த இந்தியாவின் பிம்பமாக இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் விளங்குவதாகக் கூறிய குடியரசு துணைத் தலைவர், உலகளவில் தமது உரிமையை நிலை நாட்டுவதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
“நமது கல்வி முறையை மேம்படுத்தினால் மட்டுமே இந்தக் கனவை நாம் நனவாக்க முடியும்”, என்றார் அவர்.
ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியில் வரும் சுமார் 1.5 மில்லியன் பேரில் வெறும் ஏழு சதவீதத்தினர் மட்டுமே பொறியியல் சம்பந்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதாக வருத்தம் தெரிவித்த அவர், பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டில் இயங்கும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் பி.டெக் படிப்புகளுக்கான மாணவிகளின் சேர்க்கையில் திருப்பதி இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடர்ந்து அதிக விகிதத்தைப் (18%) பெற்றிருப்பதாகக் கூறி குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்தநிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் திரு கே நாராயண ஸ்வாமி, திருப்பதி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் கே என் சத்தியநாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702450
*************
(Release ID: 1702512)
Visitor Counter : 143