பிரதமர் அலுவலகம்

36-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

Posted On: 24 FEB 2021 7:40PM by PIB Chennai

மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்து ஆறாவது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.

எட்டு திட்டங்கள், ஒரு திட்டம் குறித்த குறை மற்றும் ஒரு செயல்பாடு உட்பட பத்து விஷயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன.

இவற்றில் மூன்று திட்டங்கள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தொடர்பானதும், இரண்டு திட்டங்கள் ரயில்வே அமைச்சகம் தொடர்பானதும், தலா ஒன்று மின்சார அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தொடர்பானதும் ஆகும்.

சுமார் ரூ 44,545 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள்மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, ஒடிசா, ஜார்கண்ட், சிக்கிம், உத்தரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம், பிகார் மற்றும் மேகாலயா ஆகிய 12 மாநிலங்கள் தொடர்பானவை ஆகும்.

சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் துரிதமாக தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழை அப்புறப்படுத்தும் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். பிரதமரின் கிராம் சடக் திட்டம் குறித்த குறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

மக்களை, குறிப்பாக இளைஞர்களை, முறையான விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம், ஈடுபடுத்துமாறு பிரதமர் வலியுறுத்தினார். மேற்கண்ட திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்படும் சாலைகளின் தரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

முந்தைய 35 பிரகதி உரையாடல்களில், 17 துறைகள் தொடர்பான ரூ 13.60 லட்சம் கோடி மதிப்பிலான 290 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

-----



(Release ID: 1700606) Visitor Counter : 136