பிரதமர் அலுவலகம்

எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நிதி நிலை அறிக்கை முன்மொழிவுகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்


எரிசக்தி துறை குறித்த அரசின் அணுகுமுறை அடைதல்,வலுப்படுத்து, சீர்திருத்து என்னும் தாரகமந்திரத்தாலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாலும் வழிநடத்தப்படுகிறது; பிரதமர்

Posted On: 18 FEB 2021 5:55PM by PIB Chennai

எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில்நிதி நிலை அறிக்கை முன்மொழிவுகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக்கான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மத்திய எரிசக்தி (தனிப்பொறுப்பு) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சர், துறையுடன் தொடர்பு கொண்டவர்கள், எரிசக்தி துறை நிபுணர்கள், தொழில்துறை, சங்கங்கள், நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள், மின்சார அமைச்சகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாட்டின் முன்னேற்றத்தில் எரிசக்தி துறை பெரிய பங்கு அளித்து வருவதாக பிரதமர் கூறினார். அத்துடன், சுலபமான வாழ்க்கையை மேற்கொள்வதிலும், சுலபமாக தொழில் நடத்துவதிலும் அது பங்களிக்கிறது. அரசுக்கும், தனியார் துறைக்கும் இடையிலான  நம்பிக்கையின் அறிகுறி இந்த கருத்தரங்கு  என்று குறிப்பிட்ட பிரதமர், இத்துறைக்காக அறிவிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை முன்மொழிவுகளை விரைவாக செயல்படுத்தும் வழிமுறைகளைக் கண்டறியும் ஒரு முயற்சி இது என்றார்.

இத்துறை மீதான அரசின் அணுகுமுறை முழுமையானது என்று கூறிய பிரதமர், இந்த அணுகுமுறையை, அடை, வலுப்படுத்து, சீர்திருத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய  நான்கு மந்திரங்கள் வழிநடத்துகிறது என்றார். அடைதல் என்பதற்கு, கடைசி மைல் வரையிலான தொடர்பு அவசியமானது. நிறுவு திறனால் இந்த அடைதல் என்பது வலுப்படுத்தப்படுகிறது. இதற்கு சீர்திருத்தம் அவசியமாகும். இவை அனைத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது காலத்தின் கட்டாயமாகும் என்று பிரதமர் கூறினார்.

மேலும் விளக்கிய பிரதமர், அடைதல் என்பதற்கு, அரசு ஒவ்வொரு கிராமத்தையும், ஒவ்வொரு வீட்டையும் அடைவதில் கவனம் செலுத்தி வருவதாகப் பொருள் என்றார். நிறுவுதிறன் வலுப்படுத்துதலைப் பொறுத்தவரை, மின்பற்றாக்குறை நாடு என்பதிலிருந்து இந்தியா மின் உபரி நாடாக மாறியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா 139 ஜிகாவாட் என்ற அளவுக்கு திறனை அதிகரித்து, ஒரே நாடு- ஒரே தொகுப்புஒரே அதிர்வெண் என்ற இலக்கை எட்டியுள்ளது. உதய் திட்டம் போன்ற சீர்திருத்தம், நிதி நிலை மற்றும் செயல்பாட்டு  திறனை  மேம்படுத்த 2 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்தொகுப்பு சொத்துக்களை பணமாக்குதலுக்கு, உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படும்.

கடந்த ஆறு ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரண்டரை மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சூரிய சக்தி திறன் 15 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கை, உள்கட்டமைப்பில் முதலீட்டை ஈர்ப்பதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது. ஹைட்ரஜன் இயக்கம், சூரிய சக்தி மின்னூக்கிகளை உள்நாட்டிலேயே தயாரித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பெரும் முதலீட்டை உட்செலுத்துதல் ஆகியவற்றில் இது தெளிவாகத் தெரிகிறது.

பிஎல்ஐ திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், உயர் திறன் சூரிய சக்தி பிவி மாதிரி இப்போது பிஎல்ஐ திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று தெரிவித்தார். இதில் அரசு ரூ. 4,500 கோடியை முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளது. இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிஎல்ஐ திட்டத்தின் கீழ், ஒருங்கிணைக்கப்பட்ட, 10 ஆயிரம் மெகா வாட் திறன் சூரிய சக்தி பிவி உற்பத்தி நிலையங்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுடன் இயக்கப்படும்.

இது, இவிஏ, சூரிய சக்தி கண்ணாடி, பேக் ஷீட், ஜங்ஷன் பாக்ஸ் போன்ற உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் பொருட்களின் தேவையை அதிகரிப்பது போன்றதாகும். ‘’நமது நிறுவனங்கள் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதுடன் நின்று விடாமல், உலக அளவில் உற்பத்தி சாம்பியன்களாக மாறுவதைக் காண நாம் விரும்புகிறோம்’’ என்று பிரதமர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை மேம்படுத்த, இந்திய சூரிய சக்தி கழகத்தில், கூடுதலாக 1000 கோடி மதிப்பிலான முதலீட்டை உட்செலுத்த உறுதிபூண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதேபோல, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதலாக 1500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைப் பெறவுள்ளது. இந்தக் கூடுதல் முதலீடு, இந்திய சூரிய சக்தி கழகம், 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் முதலீடு செய்ய ஏதுவாகும் என்று பிரதமர் தெரிவித்தார். இதேபோல, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதலாக 12 ஆயிரம் கோடி கடன் வழங்க  உதவும். இது 27 ஆயிரம் கோடி மதிப்பிலான முகமையின் தற்போதைய கடன் வழங்கும் திறனை மேலும் அதிகரிக்கும்.

இத்துறையில், சுலபமாக தொழில் நடத்துவதற்கான முயற்சிகளை பிரதமர் விளக்கினார். ஒழுங்குமுறை மற்றும் நடைமுறை கட்டமைப்பில் சீர்திருத்தங்களுடன், மின்சாரத் துறை மீதான தோற்றம் கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். மின்சாரத்தை தொழில் துறையின் ஒரு பகுதியாக கருதாமல், ஒரு தனித்துறையாக அரசு கருதி நடைமுறைப்படுத்தி வருகிறது. அனைவருக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருவதே மின்சாரத்தை மிக முக்கியமாக கருத காரணமாகும். விநியோகப் பிரிவில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு பாடுபட்டு வருகிறது. இதற்காக, ஒரு கொள்கையும், டிஸ்காம் ஒழுங்குமுறை கட்டமைப்பும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மற்ற சில்லரை பொருட்களைப் போல, நுகர்வோர் தங்களது விநியோகஸ்தரை தேர்வு செய்வதற்கு முடிய வேண்டும். நுழைவு தடங்கல்கள் இன்றி, தடையற்ற விநியோகத்துக்கு உரிமம் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக பிரதமர் கூறினார். பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர், பீடர் செப்பரேசன், சிஸ்டம் அப்கிரேடேசன் ஆகியவற்றுக்கான முயற்சிகளும் நடந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் கேயுஎஸ்எம் திட்டத்தின் கீழ், விவசாயிகள் எரிசக்தி தொழிலதிபர்களாக மாறி வருகின்றனர். விவசாயிகளின் வயல்களில் சிறு உற்பத்தி நிலையங்கள் மூலம் 30 ஜிகா வாட் சூரியசக்தி திறனை  உருவாக்குவதே இலக்காகும். ஏற்கனவே, மேற்கூரை சூரிய சக்தி திட்டங்கள் மூலமாக 4 ஜிகாவாட் சூரிய சக்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இதில் 2.5 ஜிகாவாட் விரைவில் சேர்க்கப்படும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், மேற்கூரை சூரிய சக்தி திட்டங்கள் மூலம் 40 ஜிகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

------
 (Release ID: 1699178) Visitor Counter : 234